தேங்காய் சட்னியில் கருவேப்பிலை சேர்த்து அரைச்சி இருக்கீங்களா? ஆரோக்கியமான தேங்காய் சட்னி 5 நிமிஷத்துல வித்யாசமான சுவையில் எப்படி செய்யலாம்?

green-karuvepilai-chutney
- Advertisement -

தேங்காய் சட்னியில் கருவேப்பிலை சேர்த்து செய்யும் போது அதன் சுவை அபாரமாக இருக்கும் தெரியுமா? பொதுவாக கருவேப்பிலையை உணவிலிருந்து ஒதுக்கி வைப்பது தான் வழக்கம், எனவே இது போல மற்ற உணவுகளில் அரைத்து செய்யும் பொழுது அதன் முழு சத்து நமக்கு கிடைக்கிறது. அந்த வகையில் தேங்காய் சட்னி ருசியாக இருக்க கருவேப்பிலை போட்டு எப்படி அரைப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கறிவேப்பிலை தேங்காய் சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை மூடி, பொட்டுக்கடலை – நான்கு டேபிள் ஸ்பூன், இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – ஒரு பல், கருவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லித்தழை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வர மிளகாய் – 1.

- Advertisement -

கறிவேப்பிலை தேங்காய் சட்னி செய்முறை விளக்கம்:
கருவேப்பிலை போட்டு தேங்காய் சட்னி செய்ய முதலில் அரை மூடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இவற்றுடன் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பொட்டுக் கடலைக்கு தோலுரித்து வறுத்த வேர்க்கடலை சேர்த்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். பின்னர் இதனுடன் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரெண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பாதி அளவிற்கு கொத்தமல்லி தழையை சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள். பின்னர் ஒரு பல் பூண்டு, பெரிய பல்லாக பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு இஞ்சி ஒரு துண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அரைத்து எடுத்த இந்த சட்னி கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம் அல்லது தண்ணீர் போல நீர்க்கவும் கரைத்துக் கொள்ளலாம். ரொம்பவும் சுவையாக இருக்கும். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் கருவேப்பிலை எதுவும் சேர்க்க வேண்டாம், ஒரு வரமிளகாயை கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் அவ்வளவு அருமையான கருவேப்பிலை தேங்காய் சட்னி தயார்! அஞ்சு நிமிஷம் கூட இதை செய்ய ஆகாது. இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சாதாரண தேங்காய் சட்னியை விட, இந்த கருவேப்பிலை சட்னி எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்கப் போகிறது. இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -