’10 நிமிடத்தில்’ மீந்து போன ஒரு கப் சாதம் இருந்தால் சுவையான ‘அல்வா’ செய்து விடலாமே! உடனே செய்து அசத்திருங்க.

rice-halwa3

என்னது பத்து நிமிஷத்தில் அல்வாவா? என்றெல்லாம் அதிகம் யோசிக்க தேவையில்லை. அல்வா செய்வது பொதுவாகவே கடினமான காரியம் தான். நிறைய நெய் ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். நேரம் அதிகம் எடுக்கும் என்பதாலேயே அதை செய்வதை பலரும் தயங்குகின்றனர். ஆனால் பத்தே நிமிடத்தில் இந்த அல்வாவை செய்து விடலாம். இது சாதத்தில் தான் செய்ததா? என்று யாருக்கும் தெரியாத அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்கும். கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பூசணிக்காய் அல்வா என்று வித விதமாக செய்து பார்த்திருப்பீர்கள். ஆனால் மீந்து போன சாதம் வைத்து இப்படி ஒரு அல்வாவை நீங்கள் செய்து பார்த்து இருக்க மாட்டீர்கள். இந்த சுவையான சாத அல்வாவை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rice halwa

சாத அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – 1 கப், சர்க்கரை – 1 கப், நெய் – 1/4 கப், முந்திரி பருப்பு – 10, ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, கேசரி பவுடர் – 1 சிட்டிகை.

செய்முறை விளக்கம்:
அல்வா செய்வதற்கு முதலில் சாதத்தை நெய்யில் வறுக்கவும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ஒரு கப் சாதத்தை போட்டு வறுத்து எடுக்கவும். இதனால் சாதத்தில் இருக்கும் நீர்ம தன்மை நீங்கி விடும்.

rice

அதன் பிறகு மிக்ஸி ஜார் கொண்டு சாதத்தை போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். அதிகம் தண்ணீர் சேர்த்தால் கூல் போல் ஆகிவிடும். கொழ கொழவென்று அல்வா பதத்திற்கு இருந்தால் போதும். அதன் பின் அதே கடாயில் மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்புகளை ஒன்றிரண்டாக உடைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

பின்னர் அரைத்த சாதத்தை கடாயில் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒரு இரண்டு நிமிடம் கழித்து ஒரு கப் சர்க்கரை போட்டு மீண்டும் கிண்டிக் கொண்டே இருக்கவும். சாதம் இப்போது அல்வா பதத்திற்கு திரண்டு வரும். சர்க்கரை போதவில்லை என்றால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

rice-halwa2

5 நிமிடம் கழித்து அல்வா பார்ப்பதற்கு நிறமாக இருக்க கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லா இனிப்பு வகைகளிலும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பின் சுவை கூடும் என்பார்கள். அதற்காக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். வாசனைக்கு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நன்றாக கிளறி கொண்டே வாருங்கள். ஒரு ஐந்து நிமிடம் வரை தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறிக் கொண்டே வர வேண்டும். நெய் தெளிந்து மேலே வரும் பொழுது சாதம் அல்வா பதத்திற்கு திரண்டு வந்து விடும்.

rice-halwa1

அந்த சமயத்தில் எடுத்து வைத்த முந்திரி பருப்புகளை சேர்க்கவும். ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும். மிக மிக சுலபமாக இந்த அல்வாவை தயார் செய்து விடலாம். சுவைப்பதற்கு அலாதியாக இருக்கும். வீட்டில் இருக்கும் அனைவரையும் இந்த அல்வா நிச்சயம் கவர்ந்து விடும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் ஒருமுறை செய்து கொடுத்தால் இனி உங்கள் வீட்டில் சாதம் எப்போது மிஞ்சினாலும் அல்வா தான்.

இதையும் படிக்கலாமே
சுசியம் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! பூரணம் எண்ணெயில் கரைந்து போகாமல், உருண்டையாகவே வரும்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.