காலையில் எழுந்து அவசர அவசரமாக குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொண்டு செல்வதற்காக உணவு வகைகளை தயார் செய்ய வேண்டியிருக்கும். அவ்வாறு செய்யும் உணவு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அம்மாக்களை பொருத்த வரையில் குழந்தைகளுக்கு அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த மிகவும் குறைவான நேரத்தில் செய்யக் கூடியதுமான ஒரு உணவு வகை தான் கொத்தமல்லி சாதம். இதனுடன் தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு வறுவலையும் சேர்த்துக் கொடுத்தால் போதும் மிச்சம் மீதி எதுவுமே இருக்காது வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கொத்தமல்லி சாதம்:
முதலில் எப்பொழுதும் சாதம் வடிப்பது போல ஒரு டம்ளர் அரிசியைக் கழுவி உலையில் போட்டு சாதம் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 3 பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, 2 கைப்பிடி கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைத்து, நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொறித்துகொள்ள வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.

அதன்பின் இரண்டு வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொண்டு, அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி பேஸ்ட்டுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைப் இவற்றுடன் சேர்த்து நன்றாக பிரட்டி கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சாதம் தயாராகிவிடும்.
உருளைக்கிழங்கு வறுவல்:
கால்கிலோ உருளைக்கிழங்கை சுத்தமாக கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை எண்ணெயுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து இவற்றுடன் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் உருளைக்கிழங்கு எண்ணெயிலேயே வதங்கும்படி சிறிது நேரம் அப்படியே கலந்துவிட வேண்டும்.

உருளைக்கிழங்கு எண்ணெயிலேயே நன்றாக வதங்கி வெந்ததும், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். மிளகாய் தூள் பச்சை வாசனை போகும்வரை உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் சுவையான உருளைக்கிழங்கு வருவல் தயாராகிவிடும். செய்து வைத்துள்ள கொத்தமல்லி சாதத்துடன் இந்த உருளைக்கிழங்கு வறுவலை சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தோம் என்றால் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.