மழைக்காலம் வந்து விட்டாலே வீட்டில் இருக்கும் செடிகளில் எல்லாம் பூச்சி, புழுக்கள் படை எடுக்கத் துவங்கி விடும். அவற்றிடமிருந்து நம் செடியை பாதுகாக்க கட்டாயம் பூச்சி விரட்டி மருந்தை கொடுத்தாக வேண்டும். பூச்சி விரட்டி மருந்து கொடுக்கும் பொழுது தான் செடிகளில் பூச்சிகள் வந்து தொல்லைகள் கொடுக்காமல் இருக்கும். மழைக்கால பூச்சிகளை தெறிக்க தெறிக்க ஓட விட பத்து பைசா செலவில்லாமல் நாம் தூக்கி எறியும் இந்த கொட்டைகள் இருந்தால் போதும். அது என்ன கொட்டை? அதனை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்கின்ற சுவாரசிய தகவல்களை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

பொதுவாக பூச்சி விரட்டியாக நாம் எளிதாக பயன்படுத்துவது வேப்ப எண்ணெயை தான். வேப்ப எண்ணெய் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு மேல் ஸ்பிரே செய்து விட்டால் போதும் எவ்விதமான பூச்சித் தாக்குதல்களும் இல்லாமல் இருக்கும். ஆனால் இந்த மழைக் காலத்தில் அதிக அளவிலான பூச்சிகளும், இனம் தெரியாத விதவிதமான பூச்சிகளும் வந்து இனப்பெருக்கத்தை துவங்கிவிடும். அதன் இனப்பெருக்கத்தை துவங்க ஈரப்பதமான இடத்தை தான் தேடும். இதனால் அதிக பாதுகாப்பு உள்ள செடி, கொடிகளுக்கு இடையில் தங்கி இனப்பெருக்கம் செய்வதையே அது விரும்புகிறது.
இவற்றால் செடிகளுக்கு பூச்சி தாக்குதல்கள் ஏற்பட்டு வேர் அழுகல் நோய்க, இலைகளுக்கு நோய் தாக்குதல் போன்றவை ஏற்பட்டு செடி வீணாகிப் போக அதிக வாய்ப்புகள் உண்டு. நாம் கஷ்டப்பட்டு ஆசையாக வளர்க்கும் இந்த செடிகளுக்கு இத்தகைய நோய் தாக்குதல்கள் ஏற்படுவதற்கு முன்பே நாம் இப்படி சுலபமாக செலவில்லாத இயற்கை பூச்சி விரட்டியை கொடுத்து விட்டால் போதும், எவ்விதமான பூச்சிகளும் அந்தச் செடிகளை நெருங்கக் கூட செய்யாது. இந்த மழை காலத்திலும் நம்முடைய செடிகள் செழிப்பாக வளர தொடங்கும்.

நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் அதிக சத்துள்ள சீதாப் பழக்கொட்டை தான் அது. பழத்தை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோல், கொட்டை, கொட்டையில் இருந்து வரும் திப்பிகள் அத்தனையும் நமக்கு செடிகளுக்குக் கொடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த ஒரு பழத்தின் உடைய தோலையும் வீணாக்காமல் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து தண்ணீரில் கரைத்து செடிகளுக்கு உரமாக கொடுத்து வரலாம். பழத்தை விட தோலில் செடிகளுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
சீதாப்பழ தோல்களை உரமாக்கி செடிகளுக்கு கொடுக்கலாம். அது போல அதனுடைய கொட்டைகளை சேகரித்து நல்ல தண்ணீரில் ஒரு முறை கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு பவுடராக செய்து கொண்டாலும் சரி அல்லது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்துக் கொண்டாலும் சரி, தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொண்ட பின் அதனை வடிகட்டி பார்த்தால் பால் போல நமக்கு பூச்சி விரட்டி மருந்து கிடைத்துவிடும்.

இதன் வாடையே ஒரு விதமாக துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். 100ml இந்த பாலுடன் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து எல்லாச் செடிகளுக்கும் இலைகளின் மேல் ஸ்பிரே செய்து வரலாம். மீதமுள்ள திப்பிகளை மண்ணை சுற்றிலும் கிலரி உரமாக கொடுக்கலாம். இப்படி 10 நாட்களுக்கு ஒரு முறை மழை காலத்தில் மழை ஓய்ந்த பின்பு, வெயில் மறையும் சமயத்தில் கொடுப்பது மிகவும் நல்லது. இதே போல நீங்களும் செய்து பார்த்து உங்கள் வீட்டுச் செடிகள் ஆரோக்கியமாக வைத்து மகிழலாமே.