முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் தங்கள் இலக்கை அடைய வழிபட வேண்டிய முக்கியமான ஒரு தெய்வம் தட்சிணாமூர்த்தி! “தெட்சிணம்” என்றால் தெற்கு என்ற ஒரு பொருள் உண்டு. ஞானம் என்பதற்கும் தெட்சிணம் என்று கூறுவார்கள். விவேகத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும் கூட இவரை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் ஏற்படக்கூடிய பலன்கள் என்னென்ன? இவரை வழிபடும் முறை என்ன? என்பதை பற்றிய தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் தனி தனி தெய்வங்கள் ஆனால் குரு பகவானுக்கு செய்யும் எல்லாவற்றையும் தட்சிணாமூர்த்திக்கும் செய்வது உண்டு. குருவை வழிபடுபவர்கள் தட்சிணாமூர்த்தியையும் வழிபடுகிறார்கள். தட்சிணாமூர்த்தி ஞானத்தை வழங்குபவர் என்பதால் குருவின் ஸ்தானத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார், எனவே இவரும் குரு பகவான் போன்றவர் ஆகிவிடுகிறார்.
தெற்கு திசைக்கு அதிபதியாக இருக்கும் தட்சிணாமூர்த்தி ஞானம், கல்வி, கலை, வேதங்கள், தியானம் போன்றவற்றுக்கு குருவாக திகழ்கின்றார். வேத ஆகமங்களின் நுட்பங்கள் இவர் விளக்கிக் கூற முனிவர்கள் இவருடைய திருவடியிலேயே அமர்ந்திருக்கும் படி இவருடைய சிலைகளில் அமைக்கப்பட்டு இருப்பதை காணலாம். இவரை வழிபடுபவர்களுக்கு முன்னேற்றம் நிச்சயம் இருக்கும். இவரை எப்படி வழிபட வேண்டும்? என்பதை பார்ப்போம்.
தட்சிணாமூர்த்தியை வழிபடும் முறை:
தென் கடவுள் தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்கள் வெற்றிலை, பாக்கு, பழ தாம்பூலம் வைத்து வழிபட வேண்டும். இவருக்கு பதினொன்று அல்லது இருபத்தி ஒன்று ஆகிய எண்ணிக்கையில் விளக்குகள் போட வேண்டும். விளக்கில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகிய மூன்றும் கலந்து தீபம் ஏற்றி வழிபடுவது தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு ஆகும். இவரை வலம் வரும் போது 3, 9, 11 ஆகிய எண்ணிக்கையில் வலம் வர வேண்டும். தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம் 108 முறை சொல்ல வேண்டும்.
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்!!!
முல்லை மற்றும் மல்லி ஆகிய வாசனை மிகுந்த இந்த வெள்ளை மலர்கள் தட்சிணாமூர்த்திக்கு ரொம்பவும் பிடித்த மலர்கள் ஆகும். எனவே இந்த மலர்களை சாற்றி வணங்கிட வேண்டும். கொண்டைக்கடலை மாலை குருவிற்கு சாற்றுவது போல, தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலையை கோர்த்து மாலையாக சாற்றி வழிபட வேண்டும். மனதார இவரை வணங்கி உங்களின் அடுத்த கட்ட முயற்சிகள் யாவும் முன்னேற்றம் உடையதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே:
தீபாவளி அன்று செய்ய வேண்டிய குபேர பூஜை 2024
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள், இவருடைய “சின்” முத்திரையை பயன்படுத்தி தியானம் மேற்கொள்ள வேண்டும். வலது கையில் ஆள்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் இணைந்து இருக்கும் படி கையை வைத்து, மற்ற மூன்று விரல்களை மேலே பார்க்கும் படி நீட்டிக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரல் நம்மையும், கட்டைவிரல் இறைவனையும் குறிக்கும். மற்ற மூன்று விரல்கள் மாயை, ஆசை, கர்மம் ஆகியவற்றை குறிக்கும் குறியீடாகும். மனிதனின் விழிகளை மாயை என்னும் ஒன்று திரையிட்டு மறைத்து, ஆசைகளை தூண்டிவிட்டு, பாவங்களை செய்ய வைக்கும். இதிலிருந்து விடுபட இறைவனை அடைய வேண்டும் என்பது விதியாகும். “அஞ்ஞானம்” என்னும் இந்த அரக்கனை அழித்து அமைதியும், நிம்மதியையும் கொடுக்கக் கூடியவர் தட்சிணாமூர்த்தி, எனவே இவரை வழிபட்டு மனதை சாந்தப்படுத்தி தொடர்ந்து முன்னேற இவ்வாறு தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து பயனடையுங்கள்.