வீட்டில் காய்கறி இருக்கின்றதோ இல்லையோ தக்காளி, வெங்காயம் இருந்தால் மட்டும் போதும். ஏதாவது ஒரு உணவை சமைத்து விடலாம். அவ்வாறு தக்காளி, வெங்காயம் என்பது அனைத்து உணவு வகை சமைப்பதற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் தக்காளியை வைத்து பலவிதமான சைடிஷ், குழம்புகள், பொரியல்கள் செய்வதுண்டு. அவ்வாறு தக்காளி சட்னி, தக்காளி தொக்கு, தக்காளி குழம்பு என பலவிதமான உணவுகள் தக்காளியை மையமாகக் கொண்டு செய்யப்படுகிறது. அவ்வாறு காரம் மற்றும் புளிப்பு சுவை சேர்த்த உணவுகளை அனைவரும் சாப்பிட்டதுண்டு. ஆனால் ஒருமுறை தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து பச்சடி செய்து பாருங்கள். இந்த பச்சடியும் அனைத்து விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த தக்காளி பச்சடியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, சர்க்கரை – 2 ஸ்பூன், வெங்காயம் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 ஸ்பூன், பச்சை மிளகாய் – இரண்டு, சீரகம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் 2 ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் தக்காளியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் 2 பச்சைமிளகாய் ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ள வேண்டும்.
பிறகு அனைத்தையும் கொர கொரப்பாக அரைத்துக் கொண்டு, அதன் பின்னர் இவற்றுடன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தக்காளியுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்றாக குழையும் வரை வதக்க வேண்டும். பின்னர் இதனை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பின் மீது ஒரு தாளிக்கும் கரண்டியை வைத்து, மீதமுள்ள எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் இவற்றுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான தக்காளி பச்சடி தயாராகிவிட்டது.