உளுந்தே சேர்க்காமல் பஞ்சு போல புரோட்டின் நிறைந்த தோசை மாவு அரைப்பது எப்படினு உங்களுக்கும் தெரிய வேண்டாமா?

dosai-maavu-verkadalai
- Advertisement -

தோசை மாவு, இட்லி மாவு போன்றவற்றை அரைப்பதற்கு பொதுவாக அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைப்பது வழக்கம். ஆனால் இட்லி அரிசி மற்றும் உளுந்து எதுவுமே கைவசம் இல்லாமல் இருக்கும் சமயங்களில், ஆரோக்கியம் நிறைந்த புரோட்டின் சத்து கொண்டுள்ள இந்த தோசை மாவு அரைத்து ட்ரை பண்ணி பாருங்க, நீங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்க! பஞ்சு போல மெத்தென்று கெட்டியான இந்த தோசை மாவு அரைப்பது எப்படி? என்கிற ரகசியத்தை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்

தோசை மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 2 ஆழாக்கு, கெட்டியான வெள்ளை அவல் – ஒரு ஆழாக்கு, பச்சை வேர்க்கடலை – ஒரு ஆழாக்கு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தோசை மாவு அரைக்க செய்முறை விளக்கம்:
உளுந்து, இட்லி அரிசி எதுவுமே சேர்க்காமல் அரைக்க கூடிய இந்த தோசை மாவு சாதாரண சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் புழுங்கல் அரிசியை கொண்டு செய்யப்படுகிறது. இட்லிக்கு பயன்படுத்தும் இட்லி புழுங்கலரிசியில் செய்தாலும் பரவாயில்லை. அல்லது சாப்பாட்டிற்கு நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தக் கூடிய புழுங்கல் அரிசியை இரண்டு ஆழாக்கு அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதே ஆழாக்கில் கெட்டியான வெள்ளை அவல் ஒரு ஆழாக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான அவல் இல்லை என்றால் அரிசி நன்கு ஊறிய பின்பு கடைசியாக அவல் 10 நிமிடம் ஊற வைத்து பின்பு அரிசியுடன் சேர்த்து அரைக்க வேண்டும். கெட்டியான அவல் உங்களிடம் இருந்தால் அரிசியுடன் சேர்த்து கொள்ளுங்கள். அரிசி 2 ஆழாக்கு, கெட்டியான அவல் ஒரு ஆழாக்கு மற்றும் இதனுடன் ஒரு ஆழாக்கு அளவிற்கு பச்சை வேர்கடலை தோலுடன் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வேர்க்கடலையை வறுக்க வேண்டிய அவசியம் இல்லை, பச்சையாகவே சேர்த்துக் கொள்ளலாம். பிறகு ஒரு முறை நன்கு தண்ணீர் விட்டு அலசி பிறகு மீண்டும் நல்ல தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் குறைந்தபட்சம் ஊற வைக்க வேண்டும். நான்கு மணி நேரத்திற்கு பிறகு அரிசி மற்றும் கடலை அனைத்தும் நன்கு ஊறி இருக்கும். அதன் பிறகு மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கொஞ்சம் கூட கொரகொரப்பு தன்மை இல்லாமல் வெண்ணை போல நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் அரைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 2 அல்லது 3 முறை போட்டு அரைத்து எடுப்பது நல்லது.

அரைத்து எடுத்த இந்த மாவுடன் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து இட்லி மாவை அரைப்பது போல கைகளால் நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். சுமார் 8 லிருந்து 10 மணி நேரம் இந்த மாவு நன்கு புளிக்க விட வேண்டும். நன்கு புளித்த பின்பு மாவு இன்னும் கெட்டியாகி உள்ளே புளித்து போய் முட்டை முட்டையாக இருக்கும். இந்த முட்டைகளை உடைத்து விடாமல் மெதுவாக கரண்டி வைத்து கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவு எடுத்து ஊத்தாப்பம் போல கொஞ்சம் திக்காக பரப்பி கொள்ள வேண்டும். அதன் பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு அவித்து எடுத்தால் பஞ்சு போல சாஃப்டாக டேஸ்டியான புரோட்டீன் நிறைந்துள்ள இந்த சூப்பரான தோசை தயார் ஆகிவிட்டது! இதை நீங்களும் ருசித்துப் பாருங்க, உங்களுக்கும் புடிக்கும்.

- Advertisement -