அவல், தேங்காய், சோடா உப்பு, ஈஸ்ட் எதுவுமே சேர்க்காமல் பஞ்சு போல ஆப்பம் ஈசியாக சுடுவது எப்படி?

aappam-maavu
- Advertisement -

இட்லி தோசையை விட ஆப்பம் செய்து கொடுத்தால் சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு வகையாக ஆப்பம் இருக்கின்றது. இந்த ஆப்பம் செய்ய ஒரு சிலர் தேங்காய், சோடா உப்பு, ஈஸ்ட் போன்ற சில விஷயங்களை சேர்த்து செய்வது உண்டு. ஆனால் இதில் எந்த பொருட்களையும் சேர்க்காமல் வெறும் அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே வைத்து எப்படி மிருதுவான மெத்தென்ற சுவையான ஆப்பம் செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

appam3

‘ஆப்பம்’ செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – ஒரு ஆழாக்கு, பச்சரிசி – ஒரு ஆழாக்கு, உளுந்து – கால் ஆழாக்கு, வெந்தயம் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

‘ஆப்பம்’ செய்முறை விளக்கம்:
ஆப்பம் செய்ய முதலில் இட்லி அரிசி ஒரு ஆழாக்கு, பச்சரிசி ஒரு ஆழாக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் கல், குருணை போன்ற பொருட்கள் ஏதாவது இருக்கின்றனவா? என்பதை முதலில் பார்த்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்றிரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்கு அரிசியை அலசுங்கள். அதன் பிறகு அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். பின்னர் கால் ஆழாக்கு அளவிற்கு உளுந்து எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் உளுந்தையும் நன்கு அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள்.

appam4

அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக தான் ஊற வைக்க வேண்டும். ஆனால் அரைக்கும் பொழுது ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். சுமார் 4 மணி நேரம் ஊறிய பின்பு கிரைண்டரில் முதலில் உளுந்தை போடுங்கள். உளுந்து நன்கு பொங்க பொங்க தண்ணீரை தெளித்து தெளித்து ஆட்டுங்கள். உளுந்து முக்கால் பாகம் நன்கு அரைபட்ட பின்பு அரிசியை சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மற்றும் உளுந்து சேர்ந்து நன்கு அரைபட வேண்டும். இட்லி, தோசைக்கு ஆட்டுவது போல கொரகொரவென்று அரைக்கக் கூடாது. எந்த அளவிற்கு மாவு நைஸாக இருக்கிறதோ! அந்த அளவிற்கு ஆப்பம் மெத்தென்று மிருதுவாக வரும்.

- Advertisement -

எனவே பந்து போல பொங்கி வரும் அளவிற்கு மாவை நன்கு ஆட்டி எடுங்கள். பின்னர் கிரைண்டரில் இருந்து மாவை எடுத்து தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த மாவை சுமார் 8 மணி நேரம் அளவிற்காவது ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் இப்படியே ஊறினால் நன்கு மாவு புளித்து பொங்கி வரும். எனவே மாவை பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைப்பது நல்லது, அப்பொழுது தான் பொங்கி வரும் பொழுது கீழே வழியாமல் இருக்கும். மாவு நன்கு பொங்கி வந்ததும் கரண்டியை வைத்து நன்கு கிளறி கொள்ளுங்கள்.

aappam

தோசை மாவு சுடுவதை விடவும் ஓரளவிற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும் எனவே தண்ணீரை தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு ஆப்ப கடாயில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி நன்கு சுற்றி மூடி போட்டு மூடி வைத்தால் ஓரங்களில் மொறு மொறுவென்றும் மத்தியில் மெத்தென்று சூப்பரான, சுவையான அப்பம் தயார் ஆகி இருக்கும். எந்த பொருட்களையும் கூடுதலாக சேர்க்காமல் அரிசி மற்றும் உளுந்தை மட்டுமே வைத்து சுவையான ஆப்பத்தை இப்படியும் சுடலாம்! நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -