ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகையான உணவுப் பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக திகழும். அப்படி நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு குழம்பு வகையைச் சேர்ந்தது தான் மாம்பழ புளிச்சேரி. இந்த மாம்பழ புளிச்சேரியை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
வெயில் காலத்தில் அதிகமான நபர்கள் மோரை தங்களுடைய உணவில் சேர்த்துக்கொள்வார்கள். இன்னும் சிலரோ இந்த மோரை வைத்து மோர் குழம்பு செய்வார்கள். அவ்வாறு மோர் குழம்பு செய்யும் பொழுது அதில் சேர்க்கக்கூடிய காய்கறிகளின் சுவையைப் பொறுத்து மோர் குழம்பின் சுவையும் மாறுபடும். கேரளாவில் இந்த மோர் குழம்பில் மாம்பழத்தை சேர்த்து மாம்பழ புளிச்சேரி என்று ஒரு குழம்பை செய்வார்கள்.
தேவையான பொருட்கள்
- மாம்பழம் – 1
- புளிக்காத தயிர் – 200 எம்எல்
- சின்ன வெங்காயம் – 20
- பச்சை மிளகாய் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- கருவேப்பிலை – ஒரு இனுக்கு
- துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பூண்டு – 2 பல்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் மாம்பழத்தை சுத்தம் செய்துவிட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு கடாயில் சேர்த்து 150எம்எல் தண்ணீர் ஊற்றி அதனுடன் பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் இரண்டு நிமிடம் வேக விட வேண்டும். அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் நான்கு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் இவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
மாம்பழம் 2 நிமிடம் வெந்த பிறகு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் இந்த தேங்காய் விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து மூடி போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விட வேண்டும். தேங்காய் சீரகத்தின் பச்சை வாடை நீங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும். இது நன்றாக ஆரிய பிறகு தயிரை மிக்ஸி ஜாரில் ஒரு முறை ஓட்டிவிட்டு வேக வைத்திருக்கும் மாம்பழத்துடன் சேர்த்து விட வேண்டும்.
அடுத்ததாக இதை தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றையும் சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம் சிவக்க வரும் வரை வதக்கி மோர் குழம்பில் சேர்த்து ஒரு முறை கலந்து விட வேண்டும். மிகவும் சுவையான மாம்பழ மோர் குழம்பு தயாராகிவிட்டது.
இதையும் படிக்கலாமே: புளித்துப் போன இட்லி மாவை சரி செய்வது எப்படி?
இந்த மோர் குழம்பை நாம் சாதத்திற்கு மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் செய்து தரலாம். டெஸெட்டாகவும் சாப்பிடலாம். அந்த அளவிற்கு இதன் சுவையும் அருமையாக இருக்கும். மாம்பழத்தின் சுவையோ அருமை, அதை நாம் மோர் குழம்பில் சேர்ப்பதன் மூலம் மோர் குழம்பும் மிகவும் சுவையாக இருக்கும்.