உங்களிடம் பழுத்த வாழைப்பழம் இருந்தால் தூக்கி போடாதீர்கள்! ஈசியாக நாவில் கரையும் அல்வா இப்படி செஞ்சு பாருங்க சூப்பராக இருக்கும்.

banana-halwa
- Advertisement -

பழுத்த வாழைப்பழத்தை பெரும்பாலும் யாரும் சாப்பிடுவதில்லை! இதை வீணாகக் குப்பையில் எரியாமல் ஸ்வீட் ஸ்டாலில் கொடுக்கும் வாழைப்பழ அல்வா போல வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் சுவையான அல்வா தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நாவில் வைத்ததும் கரைந்து போகும் சுவையான வாழைப்பழ அல்வா எப்படி செய்வது? இனி பார்ப்போம்.

வாழைப்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் – 3, கான்பிளவர் மாவு – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப், தண்ணீர் – 1 கப், நெய் – 1/4 கப், முந்திரி – கால் கப்.

- Advertisement -

வாழைப்பழ அல்வா செய்முறை விளக்கம்:
சுவையான வாழைப்பழ அல்வா செய்வதற்கு முதலில் பழுத்த மூன்று வாழைப் பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். தோல் கறுத்து போனாலும் உள்ளே ஆரோக்கியமான பழுத்த வாழைப்பழம் இருக்கும். இதை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இது போல அல்வா செய்து கொடுத்து பாருங்கள் சுவையாக இருக்கும். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு கான்பிளவர் மாவு சேர்த்து எவ்வளவு நைசாக அரைக்க முடியுமோ, அவ்வளவு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் இதனுடன் சேர்க்க கூடாது. பின்னர் இதை அப்படியே ஓரமாக வைத்து விட்டு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து, கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். கொஞ்ச நேரத்திலேயே சர்க்கரை உருகி பாகாகிவிடும். அதன் பிறகு சிறிது நேரம் கொதிக்க வைத்தால், சர்க்கரையின் நிறம் மாற ஆரம்பிக்கும். நல்ல ஒரு பிரவுன் நிறத்தில் கொதித்து திரண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும். வெள்ளையாக இருக்கும் சர்க்கரை பாகு, பிரவுன் நிறத்திற்கு மாறிவிடும், பிறகு முக்கால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் அப்படியே அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அடி பிடிக்காத நான்ஸ்டிக் வாணலியாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். அதில் கால் கப் அளவிற்கு சுத்தமான நெய் ஊற்றி காய்ச்சுங்கள். நெய் காய்ந்ததும் ஒரு கைப்பிடி அளவு பொடித்த முந்திரி துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே நெய்யில் நீங்கள் அரைத்து வைத்துள்ள வாழைப்பழம் பேஸ்ட் சேர்த்து இடைவிடாமல் நன்கு கலந்து விடுங்கள். பச்சை வாசம் போக நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், நீங்கள் சர்க்கரை பாகை இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை பாகு சேர்த்ததும் கட்டிகளில்லாமல் நன்கு அல்வா பதத்திற்கு வரும் வரை கலந்து விட வேண்டும். 10 லிருந்து 15 நிமிடம் வரை கரண்டியால் கலந்து விட்டுக் கொண்டே இருந்தால் அல்வா கெட்டியாக ஆரம்பிக்கும்.

அல்வா போல திரண்டு எல்லா நெய்யும் ஒன்று போல் கலந்து வரும் பொழுது நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்து 2 நிமிடம் மீண்டும் கலந்து விடுங்கள். கொஞ்சம் கூட தளர்வாக இல்லாமல் அல்வா பதத்திற்கு கெட்டியானதும், அடுப்பை அணைத்து சுடச்சுட அப்படியே பரிமாறினால் சூப்பராக இருக்கும். நீங்கள் சில நாட்கள் வைத்திருந்து சாப்பிட விரும்பினால், அதை நெய் தடவிய ஒரு தட்டில் ஊற்றி ஆற விடுங்கள். ஆறியதும் கூர்மையாக இருக்கும் ஒரு கத்தியை வைத்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். இந்த வாழைப்பழ அல்வா துண்டுகள் ரொம்பவும் சுவையானதாக இருக்கும். இதை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -