ஒரு சொட்டு கூட எண்ணெய் ஊற்றாமல் வெஜிடெபிள் குருமா செய்ய முடியுமா என்ன? அதுவும் இவ்வளவு ஈஸியா.

vegkuruma_tamil
- Advertisement -

நம் எல்லோருக்குமே வெஜிடபிள் குருமா வைக்க தெரியும். எண்ணெய் ஊற்றி தான் வெஜிடேபிள் குருமா செய்வோம் அல்லவா. ஆனால் எண்ணெய் ஊற்றாமலும் சூப்பரான வெஜிடபிள் குருமாவை செய்ய முடியும். குக்கரில் ஒரு விசில் வைத்தால் வேலை முடிந்தது. நீங்கள் அவசர அவசரமாக சமைக்க கூடிய காலை நேரத்திலும் இனி, வெஜிடபிள் குருமா வைக்கலாம். இந்த ரெசிபியை தெரிந்து கொண்டால். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் குறைஞ்ச நேரத்தில் தயார்.

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் சீவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டிய உருளைக்கிழங்கு – 1/2 கப், நறுக்கிய பீன்ஸ் – 1/2 கப், நறுக்கிய கேரட் – 1/4 கப், பச்சை பட்டாணி – 1/2 கப், நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 1, பச்சை மிளகாய் – 2, காய்கறிகளுக்கு மட்டும் தேவையான அளவு உப்பு, காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு 1/2 கப் அளவு தண்ணீரை, ஊற்றி மூடி போட்டு இதை ஒரு விசில் மட்டும் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். குழைய வேக வைக்க கூடாது. (காய்கறிகள் அரை பாகம் வெந்தால் மட்டும் போதும்.)

- Advertisement -

அடுப்பில் குக்கரை தயார் செய்து வைத்து விட்டு, விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து தேங்காய் துருவல் – 2 கைப்பிடி அளவு, முந்திரி பருப்பு – 10, மிளகாய் தூள் – 2 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி இதையும் விழுதுபோல அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விசில் வந்து பிரஷர் அடங்கியிருக்கும் அல்லவா. குக்கரை திறந்து இதில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, 2 கப் அளவு தாராளமாக தண்ணீரை ஊற்றி கிரேவிக்கு இன்னும் கொஞ்சம் தேவைப்பட்டால் உப்பு போட்டு, கரம் மசாலா – 1 ஸ்பூன் தூவி, நன்றாக கலந்து விட்டு இதை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாடை போன பின்பு இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி சுடச்சுட பரிமாறினால் சூப்பரான வெஜிடபிள் கிரேவி தயார். வெஜிடபிள் குருமா என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் நாம் ஒரு சொட்டு எண்ணெய் கூட சேர்க்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் இந்த குருமா மிக மிக சுவையாக தான் இருக்கும். இது கொதிக்க கொதிக்க ரொம்பவும் திக்காகும். ஆகவே மிக்ஸி ஜாரில் இருந்து அரவையை ஊற்றும்போது தேவையான அளவு தண்ணீரை சரியான பக்குவத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் இதில் பட்டை லவங்கம் போன்ற மசாலா பொருட்களும் இந்த குருமாவில் சேர்க்க கிடையாதுங்க.

பின்குறிப்பு: உங்களுக்கு இதில் எண்ணெயில் பட்டை லவங்கம் எல்லாம் தேவை என்றாலும் குக்கரில் காய்கறிகளை போடுவதற்கு முன்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் தாளித்தும் காய்கறிகளை போட்டு விசில் வைத்து வேக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி செய்தால் ருசி கொஞ்சம் வேறுபடும். உங்களுக்கு மேலே சொன்ன ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. வேலை சுலபமாகவும் இருக்கும். அதே சமயம் குருமா ருசியாகவும் கிடைக்கும்.

- Advertisement -