முட்டை பிரியர்கள் நினைத்த உடனே முட்டை பொரியலை சாப்பிட, இந்த சைவ முட்டை பொரியல் சட்டென செய்து சுவைத்துப் பாருங்கள்

egg
- Advertisement -

ஒரு சிலருக்கு திடீரென வாய்க்கு ருசியாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதற்காக வீட்டில் எப்பொழுதும் முட்டை இருந்தால் உடனே அதில் ஒரு ஆம்லெட் அல்லது முட்டை பொரியல் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் முட்டை கூட வீட்டில் இல்லாமல் இருக்கும். இது போன்ற நேரங்களில் கடைக்கு சென்று ஒரு பொருளை வாங்கி வந்து அதன் பிறகு சமைத்து சாப்பிட வேண்டும் என்று இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே மறைந்து விடும். அந்த நேரங்களில் உடனே செய்து சாப்பிட என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் முட்டை இல்லாமல் செய்யக்கூடிய இந்த சைவ முட்டை பொரியலை ட்ரை செய்து பாருங்கள். அது மட்டுமில்லாமல் விரத நாட்களில் விரதம் இருப்பவர்களும் இந்த பொரியலை செய்து சாப்பிடலாம். இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதே இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 4, சிறிய தக்காளி – 1, பச்சை மிளகாய் – 4, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 5 ஸ்பூன், சோடா உப்பு – அரை ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – 2 குழிக்கரண்டி, உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் இஞ்சியையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பிறகு மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து வதக்கவேண்டும். பிறகு அரை ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -

இவை வதங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், 2 குழிக்கரண்டி கடலை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொண்டு, அதில் அரை ஸ்பூன் சோடா உப்பு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை மற்றொரு அடுப்பின் மீது வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த பொட்டுக்கடலை மாவை அதில் ஊற்ற வேண்டும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு நன்றாக கிளறி விடவேண்டும். அப்போது முட்டை போன்று இதுவும் சுருண்டு வர ஆரம்பிக்கும். பாதி அளவு வெந்ததும் இதனை வெங்காயம், தக்காளி வதங்கி கொண்டிருக்கும் அதே கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிது நேரத்தில் இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான சைவ முட்டை பொரியல் தயாராகிவிட்டது.

- Advertisement -