3 கோடி ரூபாயில் எமதர்மனுக்கு கோவில் கட்டிய கிராம மக்கள்

eman-temple

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில், ஆறடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன், பாசக்கயிறு, ஓலைச்சுவடி மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் எமதர்ம ராஜா. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதி மக்களுக்கு இவர்தான் இஷ்ட தெய்வம். சாதாரண மண் கோயிலாக இருந்த இந்தக் கோயில், பலதரப்பட்ட மக்களின் உதவியோடு மூன்று கோடி ரூபாய் செலவில், மிகச்சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி மாதம் 22 – ம் தேதி கும்பாபிஷேகமும் நடைபெறவிருக்கிறது.

Eman kovil

இதுவரை, சில கோயில்களில் எமதர்மனுக்கென்று தனிச் சந்நிதிகள் மட்டுமே இருந்து வந்த நிலையில், எமனுக்காக மட்டுமே தனிக் கோயில் என்பது இதுவே முதன்முறை. பிரமாண்ட பொருள்செலவில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பற்றி விரிவாகப் பேசுகிறார் கோயில் பூசாரி ராஜேந்திரன்.

“இந்தக் கோயிலுக்கு கரைகாரர்களாக (உரிமையாளர்கள் ) எட்டுக் குடும்பத்தினர் உள்ளோம். அதில் எங்கள் குடும்பமும் ஒன்று. எட்டுக் குடும்பங்களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பூஜை செய்து வருகிறோம். எனக்குப் பிறகு என்னுடைய மகன் பூஜை செய்வான்.

Eman kovil

ஆரம்பத்தில் மண்ணால் ஆன சிலையை, சிறிய கூரையில் வைத்து வழிபட்டு வந்தோம். இப்போதுதான் மக்களின் உதவியோடு 3 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கோயில் கட்டியுள்ளோம். 2 டன் எடையில், ஆறேகால் அடி உயரத்தில், 5 லட்ச ரூபாய் செலவில் எமனுக்குக் கற்சிலை வடிவமைத்துள்ளோம். எமதர்மன் சிலைக்கு மட்டும் 20 அடி ஆழத்தில் பள்ளம் பறிக்கப்பட்டு, ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான முண்டு கற்கள் போடப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலாகக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. எமன் சிலையுடன், 7 லட்ச ரூபாய் செலவில் 33 அடி உயரத்தில் ஒரு முனி சிலையும் அமைத்துள்ளோம். கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக 50 அடிக்கு 70 அடியில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது” என்ற ராஜேந்திரன், தொடர்ந்து திருச்சிற்றம்பலத்தில் எமதர்மனுக்குக் கோயில் உருவாகக் காரணமான புராணக் கதையை விவரித்தார்.

- Advertisement -

புராண வரலாறு :

“எமதர்ம ராஜாவிடம், பிரகதாம்பாளை சிறு குழந்தையாகக் கையளித்து பூலோகத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் சிவபெருமான், அந்தப் பெண் குழந்தை பெரிய பெண் ஆனபின்னர் சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை.

Sivan God

திருச்சிற்றம்பலத்தில் உள்ள கண்ணாங்குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் போது, திருமணத்துக்கு உரிய பருவத்தை அடைகிறார் பிரகாதாம்பாள். முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, பிரகதாம்பாளை சிவபெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கின்றனர். அந்நேரம், சிவபெருமான் நிஷ்டையில் இருக்கவே, மன்மதனை வைத்து சிவபெருமானின் நிஷ்டையைக் கலைக்க முடிவு செய்கின்றனர். அதன்படி திருச்சிற்றம்பலத்திலிருந்து மிக அருகில் உள்ள மன்மதனின் ஊரான மதமட்டூரிலிருந்து சிவபெருமானின் மீது பூங்கணை தொடுக்கிறார் மன்மதன்., கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான் தன் நெற்றிக்கண் பார்வையால் மன்மதனை அழித்தார்.

sivan

பின்னர், மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார் ரதிதேவி. ஆனால், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்றும், வேண்டுமானால் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழா நடைபெறும்போது மட்டும் ரதியின் கண்ணுக்குத் தெரியும்படி செய்வதாகவும் கூறி அருளினார் சிவபெருமான்.

மன்மதனின் உயிரைப் பறிக்க, மேலோகத்திலிருந்து பூலோகத்தில் எமதர்மராஜா வந்திறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம். அதன் காரணமாகவே இங்கே கோயில் அமைத்து வழிபடப்படுகிறது. இதுதான் இந்தக் கோயில் உருவாகக் காரணமான புராண வரலாறு” என்றார்.

Eman kovil

தொடர்ந்து கோயிலில் நடைபெறும் பூஜை மற்றும் எமதர்மனின் சிறப்புகள் பற்றியும் விவரித்தார்.

”ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் ஐயா எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். நேருக்கு நேராக நின்றுதான் ஐயாவை வணங்க வேண்டும். அந்த நேரத்தில் ஐயாவை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும். திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்வுகளின் பத்திரிகைகளை ஐயாவின் காலடியில் வைத்து வழிபடுவது வழக்கம்.

Eman kovil

பணத்தை வாங்கிக் கொண்டு யாரேனும் ஏமாற்றியிருந்தால் அவர்களின் பெயரை ஒரு பேப்பரில் எழுதி அதை பூஜித்து சூலத்தில் கட்டி விடும் வழக்கம் உண்டு. இதற்கு ‘படி கட்டுதல்’ என்று பெயர். படி கட்டிய சில நாள்களிலேயே கொடுத்த பணம் பலருக்குத் திரும்பக் கிடைத்துள்ளது. எமபயத்தைப் போக்கிக் கொள்ளவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும் , திருமணத் தடை நீங்கவும் இங்கே பலர் வருகிறார்கள். அவர்களுக்கு எமதர்ம மகாராஜா நல்ல பலன்களைக் கொடுக்கிறார். நாளுக்கு நாள் கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வருடம்தோறும் ஆடி மாதத்தில் திருவிழாவும், மாசி மாதத்தில் மன்மதனுக்குத் திருவிழாவும் நடக்கும். எமதர்ம மகாராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பானப் பலன்களைத் தரும்” என்றார்.

Eman kovil

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை.

இதையும் படிக்கலாமே:
அர்தநாரிஸ்வரரை பார்த்திருப்போம், பாதி விநாயகர் பாதி அனுமனை பார்த்ததுண்டா ?

இந்த கோயிலிற்கு எப்படி செல்வது ?

பட்டுக்கோட்டை – புதுக்கோட்டை செல்லும் சாலையில் பட்டுக்கோட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம் எமதர்மராஜா கோயில். பட்டுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதி இருக்கிறது.