அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்

அண்டங்கள் அனைத்தும் சிவமயம் உடையதாகும். ஆதிசித்தராக இருக்கும் சிவபெருமான் பூமியில் மனிதர்கள், இன்ன பிற உயிர்கள், தேவர்கள் என அனைவருக்கும் அருள்பாலிக்கும் இறைவனாக இருக்கிறார். உலகில் இருக்கும் சிவன்கோயில்களில் பெரும்பாலும் சிவன் லிங்கமூர்த்தி வடிவிலேயே வழிபடப்படுகிறார். ஆனால்  எறும்பு புற்று வடிவில் லிங்க வழிபாடு மேற்கொள்ளபடும் ஒரு கோயிலாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருக்கும் திருவெறும்பூர் “அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்” பற்றியும், அதன் சிறப்புக்கள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

thiruverumbur sivalingam

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் வரலாறு

சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஓவர் மலை கோயிலாக திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் இருக்கிறது. இக்கோயின் இறைவன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி எறும்பீஸ்வரர் என்றும், அம்பாள் நறுங்குழல் நாயகி, சவுந்தர நாயகி ஆகிய பெயர்களில் வணங்கப்படுகிறார்கள். கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. முற்காலங்களில் திருவெறும்பியூர் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் தற்போது திருவெறும்பூர் என அழைக்கப்படுகிறது. தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று ஏற்பட்ட சண்டையில் உடைந்த தெய்வீக மலையான மேரு மலையின் ஒரு பகுதியே இக்கோயில் இருக்கும் மலை என்று கோயில் புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களின் படி தாரகாசுரன் என்கிற அசுரன் தேவர்களை மிரட்டி வந்த போது, பிரம்ம தேவரின் அறிவுரை படி அனைத்து தேவர்களும் இத்தல சிவபெருமானை வழிபட இங்கு வந்த போது, அசுரர்கள் கண்களில் படாமல் இருக்க தேவர்கள் அனைவரும் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டனர் என்றும், அவர்களின் வழிபாட்டை ஏற்ற சிவபெருமான் தாரகாசுரனை வதம் செய்தார் என்றும் கூறுகிறது. எறும்புகளால் வழிபடப்பட்ட இத்தல சிவன் அன்று முதல் எறும்பீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலின் மூலவரான சுயம்பு லிங்கமான சிவபெருமான் எறும்பு புற்று வடிவில் இருப்பதால் இவருக்கு அபிஷேகங்கள் செய்யமால், எண்ணெய் காப்பு செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. இடது புறமாக சாய்ந்த படி இருக்கும் புற்றுலிங்கத்தின் மத்தியில் ஒரு பிளவு இருக்கிறது. ஆனால் சற்று தூரத்தில் இருந்து பார்க்கும் போது லிங்கம் ஒன்றாக இருப்பது போல் காட்சியளிக்கிறது. இதில் வலது புறம் இருக்கும் புற்று பகுதி சிவன் அம்சமாகவும், இடது புறம் இருக்கும் புற்று பகுதி அம்பாள் அம்சமாகவும் கருதி வணங்கப்படுகிறது. எனவே இந்த புற்று லிங்கத்திற்கு சிவசக்தி லிங்கம் என்கிற ஒரு பெயரும் உண்டு.

தினமும் இக்கோயிலின் பூஜைகளின் போது ஸ்வாமிக்கு படைக்கப்படும் உண்ணத்தக்க நைவேத்திய பொருட்களை எறும்புகள் வரிசையாக வந்து எடுத்து செல்லுமென்றும், இது சிவபெருமானே எறும்புகள் வடிவில் வந்து தரிசனம் தருகிறார் என்றும், இத்தகைய நேரத்தில் சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு எனவும் கூறுகிறார்கள். பிரகாரத்தில் மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சொர்ணகால பைரவர் சந்நிதியும்,அதற்கு நேரெதிரே கஜலட்சுமி சந்நிதியும் இருக்கிறது ஒரே நேரத்தில் இந்த இரு தெய்வங்களையும் வழிபடுவதால் நமது பயங்கள், கவலைகள் நீங்கி நம்மிடம் ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இங்கிருக்கும் அம்பாள் நறுமணம் வீசும் கூந்தலுடன் இருப்பதால் நறுங்குழல் நாயகி என அழைக்கப்படுகிறாள். இக்கோயிலில் அம்பாளுக்கு தினமும் ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. சந்நிதியின் முன்புறம் முன்பு வழிபடப்பட்ட அம்பாளின் சிலை இருக்கிறது. சிவனின் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்களில் ஒருவரின் முகம் கோபமாகவும், மற்றொருவரின் முகம் சாந்தமாகவும் இருக்கிறது. இக்கோயிலுக்கு கோபம், ஆத்திர உணர்வோடு வருபவர்களும் இறைவனை வழிபட்ட பின்பு மிகவும் சாந்தமானவர்களாகிறார்கள் என்பதை இது உணர்த்துவதாக கூறப்படுகிறது.

கருவறைக்கு பின்புறத்தில் இரண்டு இரண்டு காசி விஸ்வநாதர் சந்நிதிக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணியர் தனி சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். இவரது பீடத்திற்கு கீழே அறுகோண சக்கரம் இருக்கிறது. ஸ்வாமியையும் இச்சக்கரத்தையும் சேர்த்து வணங்குபவர்களுக்கு எத்தகைய தோஷங்களும் தீரும் என்பது திடமான நம்பிக்கையாகும். இக்கோயிலில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், குமார தீர்த்தம், மது தீர்த்தம் என நன்கு தீர்த்தங்கள் உள்ளன.

உடல் மற்றும் மனதளவில் மிகுந்த சோம்பல் திறன் கொண்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கினால் அந்த சோம்பல் குணங்கள் முற்றிலும் நீங்கி, ஊக்கம் மற்றும் சுறுசுறுப்போடு உழைக்கும் குணம் உண்டாகும். மேலும் வாழ்வில் உண்டாகும் எத்தகைய கஷ்டங்களும் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் அவை உடனே நீங்கும் என்பதும் அனுபவம் பெற்றவர்களின் கருத்தாகும்.

கோயில் அமைவிடம்
அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் திருவெறும்பூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல திருச்சி மாநகரத்திலிருந்து பேருந்து மற்றும் வாகன வசதிகள் அதிகம் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.30 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில்
திருவெறும்பூர்
திருச்சிராப்பள்ளி – 620 013

தொலைபேசி எண்

431 – 6574738

431 – 2510241

இதையும் படிக்கலாமே:
ஈச்சனாரி விநாயகர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Erumbeeswarar temple history in Tamil. It is also called Thiruverumbur erumbeeswarar kovil in Tamil or Erumbeeswarar kovil in Tamil or Thiruverumbur malai kovil in Tamil or Erumbeeswarar kovil Thiruverumbur in Tamil.