அஷ்டமி என்றதும் பலருக்கும் ஞாபகத்திற்கு வரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவரும், வராகி அம்மனும்தான். எந்த அளவிற்கு இவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார்களோ அதே அளவிற்கு மகாலட்சுமி தாயார் ஞாபகத்திற்கு வரவேண்டும். காரணம் அஷ்டமி என்பது அஷ்டலட்சுமிகளுக்குரிய தினமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி என்பது நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய செல்வ செழிப்பை அதிகரிப்பதற்குரிய அஷ்டமியாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அஷ்டமியில் மகாலட்சுமி தாயாரை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கோடீஸ்வர யோகம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
அஷ்டலட்சுமிகளின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அவரால் தான் இந்த உலகத்தில் கோடீஸ்வர வாழ்க்கையை வாழ முடியும். அப்படி கோடீஸ்வர வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மறவாமல் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளை வழிபட வேண்டும். வழிபடும் முறை வேராக இருந்தாலும் வழிப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு வழிப்பாட்டு முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த வழிபாட்டை நம்முடைய வீட்டிலேயே செய்யலாம். வேறு எங்கும் போய் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை. இந்த வளர்பிறை அஷ்டமி ஆனது ஜூலை மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றக்கூடிய நேரம் என்பதுதான் மிகவும் முக்கியம். காலையில் 4:30 மணி முதல் 5:30 மணிக்குள் இருக்கக்கூடிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றலாம். அந்த நேரத்தில் எழுந்து தீபம் ஏற்ற முடியாது என்று நினைப்பவர்கள் காலை 7:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் அல்லது 11:00 மணியிலிருந்து 12:00 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
இப்பொழுது வீட்டு பூஜை அறையில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டில் ஒன்பது அகல் விளக்குகளை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இதில் எட்டு அகல் விளக்குகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு அகல் விளக்கு இருப்பது போல் வைக்க வேண்டும். இந்த எட்டு அகல் விளக்குகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். நடுவில் இருக்கக்கூடிய அகல் விளக்கிற்கு நெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபங்கள் அனைத்துமே வடக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். இந்த தட்டை அப்படியே மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு கீழ் இருப்பது போல் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக மகாலட்சுமி தாயாருக்கு வைக்க வேண்டும்.
கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த தீபமானது குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் நிறைவடைந்ததும் தீபத்தை குளிர வைத்துவிட்டு பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்களுக்கு தந்து விட வேண்டும். இப்படி ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்யும் பட்சத்தில் அஷ்டலட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைத்து செல்வ செழிப்பு அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு
முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை இந்த முறையில் தீபமேற்றி வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு உயரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.