தினம் தினம் நாம் பயன்படுத்தக்கூடிய தங்க செயின், வளையல், கம்பல், மோதிரம் இவைகளில் அழுக்கு நிறைய படிந்திருக்கும். அதே சமயம் தினம் தினம் பயன்படுத்த கூடிய தங்க நகைகள் நாளடைவில், அந்த மஞ்சள் நிறம் குறைந்து பள பளப்பாக இருக்காது. பளபளப்பு குறைந்து மங்கி போயிருக்கும். தங்க நகைகளை புதுசு போல மாற்ற ஒரு சூப்பரான குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த ஐடியாவை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் எல்லா பழைய தங்க நகைகளையும் இதே போல சுத்தம் செய்து அணிந்து கொள்ளுங்கள். இந்த பண்டிகைக்கு பார்ப்பதற்கு பளபளப்பா இருப்பீங்க.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். (உப்பு தண்ணீர் ஊற்றக்கூடாது. நல்ல தண்ணீர் ஊற்ற வேண்டும்.) இதோடு 1/3 ஸ்பூன் அளவு டீ தூள், 1/2 ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா, 1/2 ஸ்பூன் அளவு ஷாம்பு. (எந்த பிராண்ட் ஷாம்பு வேணும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம்.) இந்த மூன்று பொருட்களையும் போட்டு அந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்.
தண்ணீர் நன்றாக சூடாகி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீர் சூடாக இருக்கும் போதே அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு, நன்றாக கலந்து விட்டு, அந்த தண்ணீரில் தங்க நகையை போட்டு ஊற வையுங்கள். 1/2 மணி நேரம் ஊறட்டும். அதன் பின்பு ரொம்பவும் அழுக்கப்படிந்த தங்க நகைகளை ஒரு பிரஷை கொண்டு லேசாக தேய்த்து கழுவி மீண்டும், சுத்தமான தண்ணீரில் கழுவி துடைத்து விட்டால் உங்களுடைய தங்க நகை பாலிஷ் போட்டது போல பளபளப்பாக மஞ்சள் நிறத்திற்கு மாறி இருக்கும்.
இதே டீ தூள் தண்ணீரில் மஞ்சள் தூளுக்கு பதிலாக 1 ஸ்பூன் பேஸ்ட் போட்டு நன்றாக கலந்து அதில் வெள்ளி நகைகளை போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து ஒரு பிரஷ் போட்டு தேய்த்தீர்கள் என்றால் அதில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். வெள்ளி நகையும் பளிச்சென மாறும்.
கல் வைத்த நகைகளை இந்த தண்ணீரில் போட்டு கட்டாயம் கழுவ கூடாது. ரொம்பவும் வேலைபாடுகள் இருக்கக்கூடிய நகையை இந்த தண்ணீரில் போட்டால் ரொம்பவும் பிரஷ் போட்டு தேய்க்காதிங்க. வேலைப்பாடுகள் உடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் சில பேர் வளையலுக்கு அடியில் பிளாஸ்டிக் வளையல் வைத்திருப்பார்கள். பிளாஸ்டிக்கோடு சேர்த்து சுடு தண்ணீரில் போடாதீங்க.
இதையும் படிக்கலாமே: இந்த தண்ணீரில் ஒரு முறை புதிய துணியை முக்கி எடுத்தால், அந்தத் துணியை மீண்டும் மீண்டும் எத்தனை முறை துவைத்தாலும், கிழியும் வரை ஒரு துளி கூட சாயம் போகாது.
தங்க நகைகளை அடிக்கடி வெளியில் கொடுத்து பாலிஷ் போட கூட சில பேருக்கு பயமாக இருக்கும். தங்க நகைகளை மாற்றி விடுவார்களோ, அல்லது நிறைய முறை பாலிஷ் போட்டுக் கொண்டே இருந்தால் தங்க நகை கண்ணுக்கே தெரியாமல் தேய்மானம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ஆகையால் உங்க நகைகளை நீங்களே இந்த முறையில் பாலிஷ் போட்டு புத்தம் புதியதாக மாற்றி அணிந்து கொள்ளுங்கள். குறிப்பு படிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.