குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். குரு நம்மை பார்த்து விட்டாலேயே நமக்கு இருக்கக்கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல நிகழ்வு நடைபெறுவதாக இருந்தாலும் அதற்கு குருவின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் இல்லாமல் நடைபெறும். அப்படிப்பட்ட குருவின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குருவருள் கிடைக்க வழிபாடு
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி வரும். அதேபோல் நட்சத்திரமும் வரும். திதிக்கு ஏற்றார் போலும் நட்சத்திரத்திற்கு ஏற்றார் போலும் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பு மிகுந்த வாழ்க்கையாக அமையும். அந்த வகையில் ஜூலை மாதம் 31ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய வளர்பிறை வியாழக்கிழமை. அன்றைய தினத்தில் நாம் யாரை குருவாக நினைக்கிறோமோ அவர்களை வழிபாடு செய்வதன் மூலம் குருவருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நமக்கு செல்வ செழிப்பு உயர்வதோடு சுப காரிய தடைகள் நீங்கும். அந்த வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஜூலை மாதம் 31ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய குரு ஹோரையில் செய்ய வேண்டும். எத்தனை நபர்களை நாம் குருவாக நினைத்திருந்தாலும் அவர்களை நினைத்துக் கொண்டு இந்த ஒரு மந்திரத்தை நாம் முழுமனதோடு கூற வேண்டும். மந்திரம் என்றதும் இத்தனை முறைதான் கூற வேண்டும் என்ற கணக்கு இல்லை. நம்மால் இயலும் பட்சத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மனதை ஒருநிலைப்படுத்தி இந்த மந்திரத்தை கூறும் பொழுது குருவின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.
எனக்கு குரு என்று யாரும் இல்லை என்பவர்கள் முருகப்பெருமானையோ சிவபெருமானையோ குருவாக நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம். தங்களின் குலதெய்வத்தையோ அல்லது இஷ்ட தெய்வத்தையோ கூட நாம் குருவாக நினைத்து இந்த வழிபாட்டை செய்யும் பொழுது குருவின் அருளோடு நாம் எந்த தெய்வத்தை நினைத்தோமோ அந்த தெய்வத்தின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இந்த மந்திர வழிபாட்டை செய்யும் பொழுது ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேதியமாக வைக்க வேண்டும். அதேபோல் ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். இயன்றவர்கள் கொண்டைக்கடலையை ஒரு தட்டில் பரப்பி அதற்கு மேல் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது குருவின் அருளை விரைவில் பெற முடியும்.
மந்திரம்
“ஓம் குரு குரு வசி வசி”
இதையும் படிக்கலாமே: மாதக் கடைசி நாள் செய்யக்கூடாத காரியங்கள்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை முழுமனதோடு குருவை நினைத்து யார் ஒருவர் கூறுகிறார்கள் அவர்களுக்கு குரு அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் பெருஞ்செல்வம் கிடைப்பதோடு சுப காரியங்களும் விரைவில் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.