வெள்ளையாக இருக்கக்கூடிய முடியை கருப்பாக மாற்றுவதற்கு கூடுமானவரை செயற்கையாக கிடைக்கக்கூடிய ஹேர் டை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இயற்கையான முறையில், வெள்ளை முடியை கருப்பாக மாற்றிக் கொள்வதுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது. சரி, இப்படி இயற்கையான முறையில் நம்முடைய வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும்போது நமக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வருமா என்று கேட்டால், நிச்சயம் பக்க விளைவுகள் இருக்காது. ஆனால் முடி வறண்டு போகும். முடி அதிகமாக வறட்சி தன்மை அடைந்தால், சீக்கிரமே கொட்டத் தொடங்கி விடும். முடியில் வெடிப்பு ஏற்பட்டு உடைய தொடங்கும்.
இயற்கையான பொருட்களை ஹேர் டை ஆக பயன்படுத்தும் போது கூட நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் ஒரு ஹேர்டை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றியும், இந்த ஹேர்டை போடுவதன் மூலம் ஏற்படும் வறட்சித் தன்மையிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை பற்றியும் இரண்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இயற்கையான ஹேர் டை தயார் செய்யும் முறை:
ஒரு சிறிய கிண்ணத்தில் முதலில் 1 பெரிய டேபிள் ஸ்பூன் அளவு ஹென்னா பவுடரை போட்டு, வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்து ஒரு மூடி போட்டு 8 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். இது அப்படியே ஊறட்டும்.
8 மணி நேரத்திற்கு பிறகு, அடுத்தபடியாக ஒரு சிறிய பௌலில் 4 டேபிள் ஸ்பூன் இண்டிகோ பொடி போட்டு இதில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இண்டிகோ பொடி என்றால் தமிழில் அவுரி இலை பொடி. இந்த அவுரி இலை பொடியை தண்ணீரில் கலந்த உடனேயே பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் கலந்த அவுரி இலை பொடியை நீண்ட நேரம் அப்படியே ஊறவிட்டுவிட்டு தலையில் அப்ளை செய்யக்கூடாது. (ஹென்னா பொடி, அவுரி இலை பொடி இரண்டையுமே பேஸ்ட் பக்குவத்திற்கு கலந்து கொண்டால் போதும்.)
அடுத்தபடியாக ஏற்கனவே 8 மணி நேரம் ஊற வைத்திருக்கும் ஹென்னா பேஸ்ட் இருக்கிறது அல்லவா. அதில் இந்த அவுரி இலை பேஸ்ட்டை சேர்த்து கலந்தால் நமக்கு தேவையான ஹேர் டை தயாராகிவிடும். தயார் செய்த இரண்டு பேஸ்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த ஹேர் டையை ஒரு பிரஷ்ஷால் எடுத்து உங்களுடைய நரைமுடி இருக்கும் இடத்தில் நன்றாக அப்ளை செய்து விடுங்கள்.
தலைமுடியில் இந்த டையை மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு வெறும் தண்ணீரில் தலையை அலசினால் உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறியிருப்பதை காண முடியும். நிறைய பேருக்கு இதை ஒரு முறை பயன்படுத்தும் போதே ரிசல்ட் கிடைக்கும். ஆனால் ஒரு சிலர் தங்களுடைய முடியை செயற்கையான ஹேர் டை போட்டு போட்டு பழகி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முடியில் இருக்கும் ஹேர்டை அனைத்தும் நீங்கிய பின்பு தான், இந்த குறிப்பு வேலை செய்யும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றோம். வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்திய பின்பு உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
1 டேபிள் ஸ்பூன் ஹென்னா பொடியை எடுத்துக் கொண்டால், 4 டேபிள் ஸ்பூன் அவுரி இலை பொடி நமக்கு தேவைப்படும். அதாவது 1 பங்கு ஹென்னா பொடிக்கு, 4 பங்கு அவுரி இலையை சேர்க்க வேண்டும். உங்களுடைய முடியின் அளவிற்கு ஏற்ப இதை கூடுதலாகவோ குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த குறிப்பு முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை வைத்து சொல்லப்பட்டுள்ள குறிப்பு தான். ஆனால் இந்த பொடியை முடியில் போடும்போது நிச்சயமாக உங்களுடைய முடி ட்ரை ஆகத்தான் செய்யும். இப்படி ஹேர் டை போட்டு டிரையான முடியை எப்படி வறட்சித் தன்மையிலிருந்து மீட்டு எடுப்பது. அதற்கான குறிப்பு உங்களுக்காக இதோ.
முடியில் இருக்கும் வறட்சித் தன்மை நீங்க:
இன்று மேலே சொன்ன ஹேர்டை நீங்கள் பயன்படுத்தி வெறும் தண்ணீரில் முடியை அலசி இருப்பீர்கள். அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை இந்த ஆயில் பாத் எடுக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து இதில் 1 ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த கலவையை அப்படியே டபுள் பாய்லிங் மெத்தலில் சூடு செய்யுங்கள்.
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அந்த தண்ணீரின் மேல் தயாராக இருக்கும் எண்ணெய் கலவையை வைத்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும். இதை தான் டபுள் பாய்லிங் மெத்தட் என்று சொல்லுவார்கள். சூடான எண்ணெய் வெதுவெதுப்பாக இருக்கும் போது ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு உங்களுடைய ஸ்கேல்பில் படும்படி முதலில் நன்றாக மசாஜ் செய்து விட வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பாகம் நுனி பாகம் வரை இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.
தேவைப்பட்டால் இரவு முழுவதும் கூட இந்த எண்ணெயை தலைக்கு வைத்து ஊற விடலாம். இப்படி செய்யும் போது டை போட்டதன் மூலம் ஏற்பட்ட வறட்சித்தன்மை நீங்கும் முடி கொட்டாது. (ஒவ்வொரு முறை ஹேர் டை பயன்படுத்திய பின்பும் அடுத்த நாள் இந்த ஆயில் பாத் எடுத்துக்கோங்க.) ஹேர் டை போடாமல் வறண்ட முடி இருப்பவர்களும் வாரத்தில் ஒரு நாள் இந்த ஆயில் பாத் எடுக்கலாம் தவறு கிடையாது. உங்களுக்கு மேலே சொன்ன குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.