1 கைப்பிடி மணத்தக்காளி கீரை இருக்கா? சட்டுனு ஆரோக்கியமான மொறுமொறுன்னு கீரை தோசை இப்படி செஞ்சு பாருங்க, எல்லோருமே விரும்பி சாப்பிடுவாங்க!

manathakkali-keerai-dosai
- Advertisement -

மணத்தக்காளி பல்வேறு உடல் உபாதைகளை குணப்படுத்தக்கூடிய அற்புதமான ஆற்றல் கொண்ட ஒரு மூலிகை கீரை வகை ஆகும். வயிற்றுப் புண்ணை ஆற்றக்கூடிய இந்த மணத்தக்காளி கீரை ஒரு கைப்பிடி இருந்தால் போதும், தோசை மாவுடன் இப்படி ஒரு கலவை தயார் செய்து தோசை சுட்டு மொறுமொறுன்னு சப்பு கொட்டி சாப்பிடலாம். வாரத்துக்கு ரெண்டு நாள் இது போல தோசை சுட்டு சாப்பிட வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். சூப்பரான மொறுமொறு மணத்தக்காளி கீரை தோசை எப்படி தயாரிப்பது? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மணத்தக்காளி கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பூண்டு பல் – 4, இஞ்சி துண்டு – 4, பச்சை மிளகாய் – இரண்டு, சின்ன வெங்காயம் – 10, மணத்தக்காளி கீரை – ஒரு கைப்பிடி, தோசை மாவு – தேவையான அளவு.

- Advertisement -

மணத்தக்காளி கீரை தோசை செய்முறை விளக்கம்:
முதலில் மணத்தக்காளி கீரை உங்களிடம் இருந்தால் அதை நன்கு சுத்தம் செய்து ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு நான்கு பல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு இஞ்சியையும் தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களிடம் இருக்கும் தோசை மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மிளகு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நான்கு பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அதே அளவிற்கு இஞ்சியையும் சேர்த்து வதக்கி விடுங்கள்.

- Advertisement -

ஸ்பைசியாக காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை முழுதாக அப்படியே சேர்த்து வதக்குங்கள். கண்ணாடி பதம் வர வெங்காயம் வதங்க வேண்டும். ஒரு நிமிடம் நன்கு வெங்காயம் வதங்கிய பின்பு நீங்கள் தயாராக எடுத்து வைத்துள்ள ஒரு கைப்பிடி அளவிற்கு மணத்தக்காளி கீரையை சேர்த்து சுருள வதக்கி விட வேண்டும்.

கீரை சுருள வதங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். இவை நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்து அதில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை நீங்கள் தயாராக எடுத்து வைத்திருக்கும் தோசை மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஏற்கனவே மாவில் உப்பு இருப்பதால் உப்பு போட வேண்டிய அவசியம் இல்லை. நன்கு கலந்து விட்டு எப்பொழுதும் போல பேப்பர் மாதிரி மொறுமொறுன்னு தோசை சுட்டு பாருங்க செம டேஸ்டாக சூப்பரான ஹெல்தியான கீரை தோசை ரெடி! நீங்களும் இதே மாதிரி வீட்டில் ட்ரை பண்ணி அசத்திடுங்க.

- Advertisement -