பெண்கள் என்றாலே அழகு. அந்த அழகிற்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. முகம் பார்க்க எத்தனை வசீகரமாக அழகாக இருந்தாலும் கூட கண்கள் நல்ல பொலிவுடன் இருந்தால் தான் அழகை மேலும் எடுத்துக்காட்டும்.அந்த வகையில் முகத்தின் அழகை எடுத்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியான இந்த கண்களை அழகுப்படுத்த பல அழகு சாதனங்கள் உள்ளது.
நம்முடைய பழங்காலம் முதல் இன்று வரை முக்கிய ஒரு அழகு சாதனமாக இருப்பது கண் மை தான். இந்த கண் மை இப்போது மஸ்காரா, காஜல், அய் லைனர் போன்ற பல வகைகள் உள்ளது. அவை அனைத்திற்கும் சேர்ந்த ஒரே மையை நாமே வீட்டில் தயார் செய்யலாம். அதை எப்படி செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கையான கண் மை தயாரிக்கும் முறை
இந்த கண் மை தயாரிக்க நமக்கு தேவையான பொருட்களை முதலில் தெரிந்து கொள்ளலாம். இதற்கு ஐந்து பாதாம் பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம், சிறிய வெற்றிலை ஒன்று அத்துடன் மெல்லிய காட்டன் துணி அல்லது பஞ்சு. இவை எல்லாம் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது இந்த பாதாம், ஓமம், வெற்றிலை அனைத்தும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மெல்லிய துணி அல்லது பஞ்சில் கொட்டி திரி போல சுருட்டி கொள்ளுங்கள். இப்போது ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் விளக்கெண்ணையை ஊற்றுங்கள். விளக்கெண்ணெய் கண்களுக்கு மிகவும் நல்லது.
இப்போது அகல் விளக்கில் நீங்கள் திரியாக தயார் செய்து வைத்து துணியுடன் கூடிய அந்த திரியை வைத்து தீபம் ஏற்றுங்கள். அதன் பிறகு அகலை சுற்றி மூன்று சில்வர் டம்ளர் ஒரே அளவாக உள்ளதை தலைகீழாக கவிழ்த்து வையுங்கள். இப்போது அகல் நடுவில் இருக்கும் மூன்று டம்ளரும் அகலை சுற்றி இருக்கும். இதற்கு மேல் ஒரு சில்வர் தட்டு அல்லது மண் தட்டு ஏதாவது ஒன்றை வைத்து விடுங்கள்.
அகலில் உள்ள எண்ணெய் முழுவதுமாக தீரும் வரை இந்த தீபம் எறியட்டும். இப்போது இந்த தீபத்திலிருந்து வரும் புகை நீங்கள் மேலே வைத்திருக்கும் தட்டில் கரி போல படிந்து கிடைக்கும். அதை தனியாக எடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நம் கண்ணிற்கு தேவையான மைக்கான பவுடர் கிடைத்து விட்டது. இதை சிறிய கண்ணாடி பாட்டிலில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பவுடரில் ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை இந்த ஆயில் இல்லை எனில் தேங்காய் எண்ணெய் கூட கலந்து கொள்ளலாம். இதை பவுடராக அப்படியே வைத்து விட்டு உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இதிலிருந்து கொஞ்சமாக எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம்.
இப்படி தயாரிக்கப்படும் இந்த மை இயற்கையான முறையில் தயாரிப்பதால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படுத்தாது. அது மட்டும் இன்றி இதை பயன்படுத்துவதால் மை கலைந்து முகமெல்லாம் கருப்பாகி விடுமோ என்ற அச்சம் தேவையில்லை. இது நாமாக சோப்பு போட்டு சுத்தம் செய்யும் வரை முகத்தில் வைத்த படியே இருக்கும்.
இதையும் படிக்கலாமே: முகப்பொலிவை உடனடியாக பெற ஃபேஸ் பேக்.
வீட்டிலே எளிமையாக தயாரிக்கப்படும் இந்தக் கண் மை முறை உங்களுக்கும் பிடித்திருந்தால், இது போல நீங்களும் வீட்டில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை பயன்படுத்தலாம் இது ஆரோக்கியமானதும் கூட.