நாம் முகத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு கழுத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயற்கையாகவே சில பேருக்கு கழுத்து கருமையாக இருக்கும். சிலருக்கு நகைகள் அணிவதால் கருமை ஏற்படும். சிலருக்கு தோல் ஒவ்வாமையால் கருமை ஏற்படும். இவ்வாறு எந்த வகையில் கருமை ஏற்பட்டாலும், அந்த கருமையை நீக்குவதற்கு உரிய எளிய குறிப்பை தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த கருமையை நீக்குவதற்காக பெண்கள் கழுத்திற்கு மேக்கப் போட்டு கொள்கிறார்கள். அதனால் தோளில் இருக்கக்கூடிய ஒவ்வாமை இன்னும் அதிகமாக தான் ஆகும். இந்த கெமிக்கல் சாதனங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, இயற்கையாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்து பேஸ்ட் தயாரித்து அதை தடவுவதன் மூலம் இயற்கையாகவே நம்முடைய கழுத்தில் இருக்கக்கூடிய கருமைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
முதலில் காய்ச்சாத பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கழுத்தை நன்றாக வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். 5 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவி, மிருதுவான துண்டை பயன்படுத்தி துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு பின்வருமாறு பிரெஷாக பேஸ்ட் தயாரித்து அப்ளை செய்ய வேண்டும். பேஸ்ட் தயார் செய்வதற்கு நமக்கு ஓட்ஸ், தயிர், எலுமிச்சை பழம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் தேவைப்படும். முதலில் ஓட்ஸை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் ஓட்ஸ் பவுடரை ஒரு ஸ்பூனை சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் புளிக்காத தயிரை சேர்க்க வேண்டும். இவற்றை நன்றாக கலந்த பிறகு அதில் அரை ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த பேஸ்டை எடுத்து கழுத்து முழுவதும் நன்றாக தடவ வேண்டும். குறைந்தது 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை அப்படியே 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து இந்த பேஸ்ட்டை கழுத்தில் தடவி வருவதன் மூலம் நம்முடைய கழுத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் விலகும்.
இதையும் படிக்கலாமே: பத்து நாட்களில் சினிமா ஸ்டார் போல மாற வேண்டுமா? ஊரே உங்கள் அழகை திரும்பி பார்க்க முல்தானி மெட்டியை முகத்தில் இப்படி போட்டுக்கோங்க.
முகத்திற்கு இணையான வெண்மையை கழுத்திற்கும் தந்து சங்கு போன்ற கழுத்தைப் பெற்று இருக்கிறோம் என்று அனைவரும் வருணிக்கும் அளவிற்கு நம் கழுத்தை நாம் பராமரித்து மகிழ்வோம்.