முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பியூட்டி பார்லர் சென்று அதிகமான அளவு காசை செலவு செய்து கோல்டன் பேசியல் என்று செய்து கொள்கிறார்கள் இன்றைய காலத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும். அப்படி அதிகமாக செலவு செய்தாலும் அவர்கள் உபயோகப்படுத்துவது என்னவோ கெமிக்கல் தான். இந்த கெமிக்கலால் தற்சமயத்திற்கு வேண்டுமானாலும் முகம் தங்கம் போல் ஜொலிக்கலாம். நாளடைவில் பித்தளைப் போல் மாறிவிடும். எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே எப்படி கோல்டன் பேஷியல் செய்து முகத்தை நிரந்தரமாக தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
இயற்கையான முறையில் நாம் மேற்கொள்ளும் எந்த செயலுக்கும் பாதிப்புகள் என்பது இருக்காது. ஒரு சிலரின் சருமத்திற்கு ஏற்றவாறு அந்த இயற்கையான பொருட்களை மாற்றிக் கொண்டாலேயே அவர்கள் சருமத்திற்கு தகுந்த மாதிரி பலன்கள் அவர்களுக்கு கிடைக்கும். எதிர் விளைவுகளோ அல்லது பக்க விளைவுகளோ ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டாலே யாரும் ஃபேஸ் க்ரீம், பேசியல் என்று சொல்ல மாட்டார்கள்.
தங்கத்திற்கு ஒப்பாக கருதக்கூடியது தான் பாதாம் பருப்பு. இந்த பாதாம் பருப்பை நாம் தினமும் உட்கொள்வதால் நம் உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கின்றது. அதே சமயம் இந்த பாதாமை நாம் பிரகாசமான முகத்திற்கும் பயன்படுத்தலாம். தேவையான அளவு பாதாமை எடுத்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு ஈரம் இல்லாத ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காய வைத்த பாதாமை போட்டு பொடியாக அரைத்து ஒரு டப்பாவில் மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஃபேஸ் பேக் செய்வதற்கு முன்பாக முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். இப்பொழுது ஃபேஸ் பேக்கிற்கு தேவையான அளவிற்கு பாதாம் பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பாதாம் பவுடரை பேஸ்ட் ஆக மாற்றுவதற்கு தேவையான அளவு தேனை ஊற்றி கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அது காயும் வரை அப்படியே விட்டு விட வேண்டும். காய ஆரம்பித்த பிறகு பசும்பாலை எடுத்து முகத்தில் தடவி மறுபடியும் ஒருமுறை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மறுபடியும் அதை நன்றாக காய விட வேண்டும். இவை நன்றாக காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
சைனஸ் பிரச்சினை இல்லாதவர்களும் முகப்பரு இருப்பவர்களும் எலுமிச்சம் பழ சாற்றையும் இதனுடன் சேர்த்து முகத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கி அதன் வடுக்கள் தெரியாமல் முகம் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முகம் பிரகாசம் அடைவதை கண்கூடாக காண முடியும். ஒன்று இரண்டு முறை செய்தாலே நல்ல வித்தியாசம் தென்படும்.
ஒருமுறை பாதாம் பவுடரை அரைத்து வைத்துக் கொண்டு நமக்கு தேவைப்படும் நேரத்தில் எல்லாம் கோல்டன் பேஷியல் செய்து நம் முகத்தை தங்கம் போல் ஜொலிக்க செய்வோம்.