நம்முடைய தலைமுடியை நாம் நன்றாக பராமரித்தால்தான் அதனுடைய ஆயுள் காலமானது அதிகமாக இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் தலை முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்ற பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் ஆரோக்கியமாக திகழும். இதற்காக பலரும் பல ஹேர் பேக்குகளை பயன்படுத்துவார்கள். வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய எளிமையான ஹேர் பேக்காக இருந்தாலும் அதை தயார் செய்வதற்குரிய நேரம் என்பது மிகவும் தேவை அல்லவா? இந்த நேரம் கிடைக்காமல் பலரும் தங்களுடைய முடியை பராமரிக்காத நிலைக்கு ஆளாகிறார்கள்.
அதிலும் குறிப்பாக வீட்டு வேலையும் செய்து கொண்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுபோன்ற தங்கள் உடல் ரீதியான பராமரிப்பை மேற்கொள்வதற்கு நேரம் இல்லாமல் போய்விடும். அப்படிப்பட்டவர்கள் ஒரே ஒருமுறை மட்டும் இந்த பொடியை எப்படி தயார் செய்து வைத்துக் கொண்டால் அவர்கள் நினைக்கும் பொழுதெல்லாம் ஹேர் பேக் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய தலைமுடிக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களாக சில பொருட்கள் இருக்கும். அந்த பொருட்களை நாம் பயன்படுத்தினாலே நம்முடைய தலைமுடி ஆரோக்கியமாக திகழும். அந்த பொருட்கள் கருவேப்பிலை, பச்சை பயிறு, வெந்தயம், கருஞ்சீரகம் போன்றவை. இவை நான்கையும் சேர்த்து நாம் பவுடராக தயார் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் நாம் நினைக்கும் போதெல்லாம் இந்த ஹேர் பேக்கை நம்மால் உபயோகப்படுத்த முடியும். சரி இப்பொழுது பவுடரை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போமா?
முதலில் இரண்டு கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்றாக உருவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து இந்த கருவேப்பிலையை அப்படியே அந்த கடாயில் போட்டு குறைந்த தீயில் கருக விடாமல் சருகாகும் வரை வறுக்க வேண்டும். அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது 50 கிராம் அளவிற்கு பச்சைபயிரை அந்த கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். 20 கிராம் அளவிற்கு வெந்தயம் 20 கிராம் அளவிற்கு கருஞ்சீரகம் இவற்றையும் அதே கடாயில் சேர்த்து கடை ஏற்கனவே சூடாக இருக்கும் அல்லவா அந்த சூட்டிலேயே சிறிது நேரம் அந்த பொருட்கள் அனைத்தையும் வருத்துக்கொள்ளுங்கள்.
வெயில் நன்றாக அடிக்கும் பட்சத்தில் இவை அனைத்தும் வெயிலில் காயவைக்கலாம். இப்பொழுது இவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரித்துக்கொள்ளுங்கள். சல்லடையை வைத்து சலித்து நைசான பவுடராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு காற்று போகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். என்றைக்கு நாம் தலைக்கு குளிக்க போகிறோமோ ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நம்முடைய தலை முடிக்கு தேவையான அளவு பவுடரை எடுத்து ஒரு பவுலின் போட்டு அரிசி ஊறவைத்த தண்ணீரோ அல்லது சாதம் வடித்த கஞ்சியோ அல்லது தயிர் இவை மூன்றுமே கிடைக்காத பட்சத்தில் வெறும் தண்ணீரை மட்டுமாவது ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கலந்து கால் மணி நேரம் மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.
கால் மணி நேரம் கழித்து இந்த பேக்கை எடுத்து நம்முடைய தலைமுடியின் வேர்க்கால்கள் மற்றும் முடியில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து சாதாரண தண்ணீரை ஊற்றியே தலைக்கு குளித்து விட வேண்டும். இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதற்கு முன்பாக சிறிது எண்ணெயை தலையில் தேய்த்து பிறகுதான் பயன்படுத்த வேண்டும். இதில் இருக்கக்கூடிய பச்சைப் பயறும், வெந்தயமும் இயற்கையான ஷாம்புவாக திகழ்வதால் நாம் மறுபடியும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெந்தயத்தை சேர்த்து உள்ளதால் சளி பிடிக்காது. ஏனென்றால் இதில் நாம் கருஞ்சீரகத்தை சேர்த்திருக்கிறோம்.
இதையும் படிக்கலாமே: தலைமுடி உதிர்வை தடுக்கும் கிராம்பு
மிகவும் எளிதில் ஒரே ஒருமுறை மட்டும் தயார் செய்து வைத்துக் கொண்டு நாம் நினைக்கும் போது பொழுதெல்லாம் இந்த ஹேர் பேக்கை நம்முடைய தலையில் தடவி குளிப்பதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை என்பது படிப்படியாக குறையும். முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.