ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று பார்க்கும்போது முதலிடம் பிடிப்பது முடி உதிர்தல் பிரச்சனைதான். இது இளம் வயதினரிலிருந்து முதுமை பருவம் அடைந்தவர்கள் வரை அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு கவலை. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி உதிர்தலை நிறுத்தி முடியை கருமையாக வளரச் செய்ய உதவக்கூடிய மூலிகை எண்ணெய் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக முடி உதிர்தல் பிரச்சனை என்பது பல காரணங்களால் ஏற்படும். அதில் மிகவும் குறிப்பாக கூறப்படுவது உடல் உஷ்ணம், மன அழுத்தம், வேர்க்கால்கள் வலுவிழத்தல். இது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை என்று தான் கூற வேண்டும். இந்த மூன்றையும் நீக்கி முடியை கருமையாக வளரச் செய்ய ஒரே ஒரு மூலிகை இருந்தால் போதும். அந்த மூலிகை தான் கீழாநெல்லி.
கீழாநெல்லியில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த கீழாநெல்லியில் நாம் எண்ணெய் தயார் செய்து தலைக்கு தேய்ப்பதன் மூலம் உடல் உஷ்ணம் என்பது குறையும். அதே சமயம் மன அழுத்தம் நீங்கும். இதனால் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். சரி இப்பொழுது எண்ணெய் தயார் செய்யும் முறையை பற்றி பார்ப்போம்.
முதலில் கீழாநெல்லி செடி வேரோடு இருப்பது போல் பறித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த செடியை மண்ணில்லாமல் சுத்தமாக கழுவி உலர வைத்து விடுங்கள். ஏனென்றால் இதை எண்ணெயில் போடும் பொழுது தண்ணீர் சக்தி இருந்தால் எண்ணெய் வெடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கும் என்பதால் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கால் லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்து சூடு பண்ண வேண்டும். எண்ணெய் சூடானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீழாநெல்லி செடியை நன்றாக இடித்து எண்ணெயில் போட வேண்டும். மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து போடுவதை விட இடித்து போடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
இதை குறைந்த தீயில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கீழாநெல்லி கீரை கருகும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும். நன்றாக நிறம் மாறி கருக ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அன்று ஒரு நாள் முழுவதும் அப்படியே கடாயில் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இதை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்து தினமும் தேய்க்க வேண்டும்.
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் கீழாநெல்லி இலைகளை தவிர்த்து விட்டு வேரை மட்டும் பயன்படுத்தி எண்ணெய் தயாரித்துக் கொள்ள வேண்டும். காரணம் கீழாநெல்லி என்பது மிகவும் குளிர்ச்சியானது. அல்லது தினமும் தேய்ப்பதற்கு பதிலாக தலைக்கு குளிக்கும் நாளில் மட்டும் காலையில் தேய்த்து ஊற வைத்து பிறகு தலைக்கு குளித்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: முகம் வெள்ளையாக மாற கொத்தமல்லி ஃபேஸ் பேக்
தெருவோரங்களில் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடிய இந்த கீழாநெல்லி மூலிகையை பயன்படுத்தி நம்முடைய மன அழுத்தத்தை முடி உதிர்தலை தடுத்து முடியை கருகருவென்று அடர்த்தியாக வளரச் செய்ய முடியும்.