தக்காளி ஊறுகாய் ஒருமுறை இப்படி செஞ்சு வச்சுக்கிட்டா 6 மாசத்துக்கு சூடான சாதம், ரசம், சாம்பார், தயிருக்கு தொட்டுக் கொள்ளலாம்!

tomato-pickle2
- Advertisement -

வீட்டிலேயே நாம் பக்குவமான முறையில் அரைக்கும் இந்த தக்காளி ஊறுகாய்க்கு ஈடு இணை கிடையாது. தக்காளி, பூண்டு, புளி சேர்த்து செய்யப்படும் இந்த ருசி மிகுந்த ஊறுகாய் ஒருமுறை செஞ்சு வச்சு கிட்டா, ஆறு மாதத்திற்கு கவலையே வேண்டாம். சூடான சாதத்துடன் அப்படியே பிசைந்து சாப்பிடலாம் அல்லது ரசம், சாம்பார், தயிர், கலவை சாதங்களுக்கு தொட்டுக் கொள்ளவும் அட்டகாசமாக இருக்கும். இத்தகைய தக்காளி ஊறுகாய் எளிதாக வீட்டிலேயே எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்க இருக்கிறோம்.

தக்காளி ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – ஒரு கிலோ, கடலெண்ணெய் – 50ml, புளி – 100g, வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – மூன்று டேபிள்ஸ்பூன், கல் உப்பு – 250g, பூண்டு – 100g, மிளகாய் தூள் – 200 கிராம், தாளிக்க: கடலை எண்ணெய் – 250ml, கடுகு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 6, இடித்த பூண்டு – ஒரு கைப்பிடி. கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி ஊறுகாய் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கிலோ தக்காளி பழங்களை மிகவும் பழுத்ததாகவும் இல்லாமல், காயாகவும் இல்லாமல் சரியான பழமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, துடைத்து காய விடுங்கள். தக்காளி பழத்தில் கொஞ்சம் கூட ஈரப்பதம் இருக்க கூடாது. இப்போது அதன் காம்பு பகுதியை வெட்டி எடுத்து விட்டு மீதம் இருக்கும் தக்காளி பழங்களை நான்கைந்து துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

100 கிராம் அளவிற்கு புது புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நீங்கள் வெட்டி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 50ml அளவிற்கு கடலை எண்ணெய் சேர்த்து கலந்து விடுங்கள். ஒரு ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து மூடிக் கொள்ளுங்கள். ஆவியிலேயே தக்காளி பழங்கள் நீர் விட ஆரம்பிக்கும். அதன் பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள புளியை அப்படியே சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து கொள்ளுங்கள். தக்காளியுடன் புளி சேர்ந்து நன்கு வேக ஆரம்பிக்கும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் வெந்தயத்தை சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் கடுகு சேர்த்து வறுக்க வேண்டும். வெந்தயம் பொன்னிறமாகவும், கடுகு வெண்ணிறமாகவும் மாறும். அப்போது அடுப்பை அணைத்து இதை ஆறவிட்டு கொள்ளுங்கள். பிறகு தக்காளி மற்றும் புளி சேர்த்து வைத்துள்ள பாத்திரத்தில் கல் உப்பு சேர்க்க வேண்டும். கல் உப்பு அவ்வளவாக கரிக்காது எனவே தூள் உப்பை பயன்படுத்தாதீர்கள். தூள் உப்பு பயன்படுத்துபவர்கள் உப்பின் அளவை குறைக்க வேண்டும். தக்காளி குழைய வெந்ததும், அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். அதை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

100 கிராம் அளவிற்கு பூண்டு பற்களை தனித்தனியாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். தோல் நீக்க வேண்டிய அவசியமில்லை. இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஆறிய வெந்தயம் மற்றும் கடுகு போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு அதிலேயே நீங்கள் உடைத்து வைத்துள்ள பூண்டை சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுக்க வேண்டும். பின்பு தக்காளி பேஸ்ட் செய்து வைத்துள்ள கலவையில் இருந்து பாதியை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் தக்காளி பேஸ்ட் உடன் மிளகாய் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். மிளகாய்த்தூள் வீட்டில் அரைத்த மிளகாய் தூள் என்றால் இந்த அளவு சரியாக இருக்கும். கடையில் வாங்கினால் 50 கிராம் குறைத்துக் கொள்ளுங்கள். தக்காளி பேஸ்ட் உடன் இந்த அரைத்த விழுதையும், கடுகு வெந்தய விழுதையும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வாணலியில் 250ml அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வரும் பொழுது, வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் வரமிளகாயை கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு பூண்டை தோலுடன் நான்கு இடித்து சேர்க்க வேண்டும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை பச்சையாக சுத்தம் செய்து உருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொன்னிறமாக தாளித்து நீங்கள் கலந்து வைத்துள்ள தக்காளி ஊறுகாயுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். நன்கு ஆறியபின் பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி ஊறுகாய் 6 மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். நீங்களும் இதே முறையில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -