கோதுமையில் இருந்து கோதுமை மாவு, ரவை, குருணை எப்படி வீட்டிலேயே 10 பைசா செலவு செய்யாமல் பிரித்தெடுப்பது?

wheat-process

விலை கொடுத்து வாங்கும் கோதுமையில் இருந்து சுலபமாக நாம் 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே கோதுமை மாவு, கோதுமை ரவை, கோதுமை குருணை ஆகியவற்றை தனித் தனியாக பிரித்து எடுக்க முடியும். ஆனால் அவற்றை விடுத்து இவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளோம். கோதுமையில் இருந்து பிரித்து கொடுக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை கணக்கு போட்டு பார்த்தால் இரட்டிப்பு நஷ்டம் நமக்கு தான். எனவே வீட்டிலேயே இவற்றை சுலபமாக எப்படி தயார் செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

wheat

நீங்கள் வாங்கும் கோதுமை ரேஷன் கோதுமையாக இருந்தாலும் சரி, காசு கொடுத்து கடையில் வாங்கும் கோதுமையாக இருந்தாலும் சரி, எதுவாகினும் ஒரு முறை சலித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். நன்கு சலித்த பின் அதனை ஒரு முறை சுத்தமான தண்ணீரில் அலசிக் கொள்ளுங்கள். ரேஷன் கோதுமையாக இருந்தால் ஒன்றுக்கு மூன்று முறை நல்ல தண்ணீரில் அலசவும். பின்னர் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை நன்கு வடித்து கோதுமையை குக்கரில் போட்டு கொள்ளுங்கள்.

பின்னர் கோதுமை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து ஐந்திலிருந்து ஆறு விசில் வரை விடவும். கோதுமை நன்கு வெந்து வந்திருக்கும். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு நன்கு வெயிலில் ஒரு சுத்தமான துணியை விரித்து அதில் கோதுமையை பரப்பி காய விடுங்கள். அடிக்கிற வெயிலில் காலையில் காய வைத்தால் சாயங்காலத்தில் நன்கு காய்ந்து விடும். காய்ந்த கோதுமையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். கோதுமை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மெஷினுக்கு சென்று அரைத்து வர வேண்டும்.

wheat-items

அரைத்து வந்த கோதுமையை கோதுமை சலிக்கும் சல்லடை கொண்டு 3 முறை சலிக்க வேண்டும். மாவு சலிக்கும் சல்லடையில் பொருத்தி முதலில் மாவை தனியாக பிரித்தெடுக்க வேண்டும். அதன் பிறகு கோதுமை ரவை தனியாக வருவதற்கு இன்னொரு ஜல்லடை பொருத்தி நன்கு சலிக்க வேண்டும். ரவை மட்டும் தனியாக பிரிந்து வரும். மீதமிருக்கும் குருணையை தனியாக பத்திரப்படுத்திக் கொள்ளலாம். குருணையை விரும்பாதவர்கள் மீண்டும் மிக்ஸியில் அரைத்து ரவையாகவும் செய்து கொள்ளலாம்.

கோதுமை ரவையில் உப்புமா, கிச்சடி, கொழுக்கட்டை, பாயாசம் எல்லாம் செய்யலாம். அது போல கோதுமை மாவில் செய்யப்படும் தோசையை விட கோதுமை குருணை கொண்டு செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது? என்பதை பார்ப்போம். கோதுமை குருணையை 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

kurunai-dosai

அதன் பின்னர் ஒரு தக்காளி, மூன்று காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, வெங்காயம் தாளித்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை குருணை தோசை தயாராகி இருக்கும். இவ்வளவு ஆரோக்கியமான விஷயங்களை எளிதாக வீட்டிலேயே செய்ய முடியும். எனவே சிரமம் பார்க்காமல் ஒருமுறை இப்படி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.