மிகவும் எளிமையான ஒரு உணவு என்றால் அது பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசி சேர்த்து செய்யும் வெண் பொங்கல் தான். இந்த பொங்கலை எவ்வளவு பக்குவமாக பார்த்து பார்த்து செய்தாலும் அதன் சுவை ஹோட்டலில் சாப்பிடும் பொங்கலின் சுவைக்கு ஈடாக இருப்பதில்லை. இதற்கு காரணம் என்னவென்றால் ஹோட்டலில் செய்கின்ற பொங்கலில் அவற்றுடன் சேர்க்கும் தண்ணீரின் அளவை சரியான பதத்திற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வாறு பொங்கலின் சுவையைக் கூட்டுவதற்கு இதில் சேர்க்கப்படும் பொருட்களின் அளவும், தண்ணீரின் அளவும் சரியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சுவையான மிளகு பொங்கலை வீட்டிலேயும் சுவைக்க முடியும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
ரேஷன் பச்சை அரிசி – ஒரு டம்ளர், பாசிப்பருப்பு – ஒரு டம்ளர், நெய் – 3 ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 2, முந்திரிப்பருப்பு – 15, கருவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் ஒரு டம்ளர் பச்சரிசி மற்றும் ஒரு டம்ளர் பாசிப்பருப்பை சேர்த்து, தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவ வேண்டும். பிறகு ஒரு டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். இங்கு ஒரு டம்ளர் அரிசி, ஒரு டம்ளர் பாசிப்பருப்பு சேர்த்து உள்ளதால் 8 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் குக்கரை மூடி அடுப்பின் மீது வைத்து, குக்கரில் பிரஷர் வந்ததும் விசில் போட வேண்டும். பிறகு மூன்று விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறையும் வரை காத்திருந்து பின்னர் குக்கர் மூடியைத் திறக்க வேண்டும்.
அதன்பின் அடுப்பின் மீது சிறிய கடாயை வைத்து, இரண்டு அரை ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாகப் பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை பொங்கலுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் கமகம வாசனையுடன் சுவையான மிளகு பொங்கல் தயாராகிவிட்டது. இதனுடன் சட்னி அல்லது சாம்பார் சேர்த்து பரிமாறி கொடுத்துப் பாருங்கள். ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் மிகவும் அருமையாக இருக்கும்.