தைத்திருநாள்(14/1/2021) பொங்கல் வைக்க ‘நல்ல நேரம்’ எது? மிக எளிதாக பாரம்பரிய முறைப்படி பொங்கல் பூஜை செய்வது எப்படி?

pongal-festival-2021
- Advertisement -

தைத் திருநாளான பொங்கல் திருநாள் ஜனவரி 14ஆம் தேதி 2021இல் பிறக்க இருக்கிறது. விவசாயம் செழிக்க, ஊர் மக்கள் எல்லாம் பஞ்சமின்றி வாழ சூரிய பகவான் அருள் புரிந்ததால், அவரை கௌரவிக்கும் விதமாக நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு நாளாக பொங்கல் பண்டிகை இருந்து வருகிறது. விவசாயம் செய்பவர்கள் மட்டும் தான் பொங்கலை கொண்டாட வேண்டும் என்கிற அவசியமில்லை. சாப்பாடு சாப்பிடும் ஒவ்வொருவரும் இந்த பண்டிகையை கொண்டாடுவது தான் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதாக அமையும். வருகின்ற பொங்கலன்று பொங்கல் வைக்க நல்ல நேரங்கள் எவையெல்லாம்? பொங்கலை எப்படி பாரம்பரியமான முறையில் எளிமையாக கொண்டாடுவது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

pongal 1-compressed

முந்தைய காலத்தில் சித்திரைக்கு பதிலாக தைத்திருநாள் தான் தமிழர்களுக்கு புத்தாண்டாக இருந்தது என்கிற கூற்றும் உண்டு. மேலும் விவசாயத்தில் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்கள் எல்லாம், தை மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரிய பகவானுக்கும், மற்ற கால்நடை உயிர்களுக்கும் வழிபாடு செய்வது தான் இந்த பொங்கல் பண்டிகை. இயற்கை கடவுளாக விளங்கும் சூரிய பகவானை பொங்கல் அன்று வணங்குபவர்களுக்கு வாழ்வில் சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

பொங்கல் திருநாளிற்கு முந்தைய போகி திருநாள் அன்றே வீடு முழுவதும் இருக்கும் குப்பைகளை எரித்து சாம்பலாக்கி, வீட்டை சுண்ணாம்பு அடித்து சுத்தம் செய்து வைத்து விடுவார்கள். பூஜை அறை மற்றும் சமையல் அறை முழுவதும் புத்தம் புதியதாக மாற்றி அமைத்து பொங்கலை வரவேற்க காத்துக் கொண்டிருப்பார்கள். அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி சூரிய பகவானுக்கு வழிபாடுகள் செய்வார்கள். சூரிய பகவானை வழிபடும் பொழுது சூரியனுக்கு நேரே சூரிய ஒளி படும் இடத்தில் பூஜைக்கு ஏற்பாடு செய்வது முறையாகும். இப்படி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் செய்யலாம். முடிந்தவரை சூரிய ஒளியில் பூஜை செய்வது உத்தமம்.

pongal-temple

பொங்கல் வைக்க ‘நல்ல நேரம்’ எது?
பொதுவாக பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விசேஷமான காலம் ஆகும். பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைப்பதும் விசேஷமாக கருதப்படுகிறது. 14/1/2021 அன்று மகர லக்னத்தில் 6.34 மணிக்கு சூரியன் உதயமாகிறது. இந்த வேளையில் சூரியனை நோக்கி தீபாராதனை காண்பிப்பது பாரம்பரிய முறையாகும். சீக்கிரம் பூஜை செய்ய முடியாதவர்கள் 7 மணி முதல் 8 மணி வரை பூஜை செய்யலாம். அப்படியும் தவற விடுபவர்கள் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக பூஜையை நிறைவு செய்துவிட வேண்டும். உச்சிக்கால வேளையில் பொதுவாக பூஜைகள் செய்யப்பட மாட்டாது. ஆனால் இது சூரியனை வணங்கி செய்யப்படும் வழிபாடாக இருப்பதால் இந்த வேளையில் பூஜை செய்வது மிகவும் விசேஷமானது.

- Advertisement -

பொங்கல் வைக்க வேண்டிய இடத்தில் முதல் நாளே சாணம் கொண்டு மொழுகி மஞ்சள் தண்ணீர் தெளித்து தயார் செய்து வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து பச்சரிசி மாவில் வண்ணக்கோலங்கள் போட்டுக் கொள்ள வேண்டும். 3 கரும்புகளை இணைத்து கட்டி தளம் அமைத்துக் கொள்வார்கள். வெளியில் இடம் இல்லாதவர்கள், பால்கனியில் கலர் கோலம் போட்டு வைத்துக் கொள்ளலாம். பூஜைக்கு முதலில் முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானை பிள்ளையார் பிடித்து வைப்பது கட்டாயம் செய்யக் கூடிய ஒரு விஷயமாகும். மஞ்சளில் பிள்ளையாரைப் பிடித்து வெற்றிலையில் ஆவாகனம் செய்ய வேண்டும். அவருக்கு அருகம்புல் வைத்து பூரண கும்ப கலசம் வைக்க வேண்டும்.

Kalasam

கலசம் வைக்கும் முறை:
முழு வாழையிலையில் அரிசியை பரப்பிக் கொள்ள வேண்டும். அதன் மேல் கும்பம் வைத்து குடும்பத்திற்குள் பச்சரிசியை இரு கைகளால் குடும்பத்தலைவி போட வேண்டும். பின்னர் அதனுள் உங்களிடம் இருக்கும் ஸ்வர்ண நகைகளை போடலாம். அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் போடலாம். அதன் மேல் மாவிலை வைத்து, மஞ்சள் பூசிய தேங்காய் ஒன்றை கலசமாக வைக்க வேண்டும். கலசம் மற்றும் தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

pongal2

பின்னர் பொங்கல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புதுப்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வழியும் பொழுது சூரிய பகவானை நோக்கி ‘பொங்கலோ பொங்கல்… பொங்கலோ பொங்கல்…’ என்று கூறிக் கொண்டே குலவையிட்டு வழிபட வேண்டும். பொங்கல் தயாரானதும் வாழையிலையில் நிவேதனம் வைத்து பூஜையை தொடங்கலாம். சிலர் வெண்பொங்கல், மற்றும் நாட்டு காய்கறிகளை சேர்த்து வைத்த கூட்டு வைப்பார்கள். பொங்கல் அன்று நாட்டு காய்கறிகளை கொண்டு சமையல் செய்வது மிகவும் விசேஷமாகும். பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள், கொடி காய்கள், நாட்டு காய்கள் பயன்படுத்தி சமையல் செய்யுங்கள்.

pongal3

பூஜைக்குரிய நல்ல நேரத்திற்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு, மஞ்சள் பிள்ளையாருக்கு முதலில் ஆரத்தி காண்பித்து விட்டு, பின்னர் சூரியனுக்கு காண்பிக்க வேண்டும். அதன் பின்னர் தான் பூஜை அறைக்கு சென்று பொங்கலை வைத்து மற்ற தெய்வங்களுக்கு ஆரத்தி காண்பிக்க வேண்டும். பின்னர் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தீப ஆராதனையை தொட்டு வணங்கி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பொங்கல் பிரசாதத்தை உற்றார், உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து, பின் வீட்டில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படியாக பொங்கலை கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் பொங்கல் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே
இன்று(12/1/2021) ஹனுமன் ஜெயந்தி! மாலையில் ஹனுமருக்கு இதை செய்தால் நினைத்ததெல்லாம் அப்படியே கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -