ஒருவருடைய ஜாதகத்தில் என்ன யோகம் இருக்கிறது என்று கண்டறிவது எப்படி ?

astro wheel

நமக்கு எப்போது யோகம் வரும் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய ஒன்று தான். இதற்கான பதிலை நீங்களே உங்களுடைய ஜாதகத்தை வைத்து எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

astrology

 

பொதுவாக யோகம் என்பது அவற்றின் தசா புத்தியில்தான் பரிபூரணமாக வேலை செய்யும். ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 300க்கும் மேல் உள்ளன. அதில் முக்கியமான பத்து யோகங்களைப் பற்றி பார்ப்போம்.

1.கிரகமாலிக யோகம்:

ஒரு ஜாதகத்தில் லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் உயர்ந்து சமூக அந்தஸ்துடன் மாலை மரியாதையோடு வாழக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த யோகம் கொண்டு வரும்.

- Advertisement -

2.சகடயோகம்:

ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கொருவர் ‘ஷஷ்டாஷ்டகம்’ எனப்படும் 6, 8- ம் இடங்களில் அமர்ந்தால், இந்த யோகம் ஏற்படும். வாழ்க்கையில் அதிக போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆனால், வாழ்க்கையின் பிற்பகுதி மிகவும் யோகமாக அமையும்.

astro wheel

3.குரு மங்கள யோகம்:

ஜாதகத்தில் குருவும், செவ்வாயும் சேர்ந்து நின்றாலோ அல்லது, ஒருவருக்கொருவர் எதிரில் நின்றாலோ, இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள், தான் செய்யும் தொழிலில் உயர்வுபெற்று, பல தொழில்களாக விரிவுபெற்று நல்ல ஒரு தொழிலதிபராக முன்னுக்கு வருவார்கள்

4.பத்ர யோகம்:

ஜாதகத்தில் ஒருவருடைய லக்னத்துக்கு 4, 7, 10 – ம் இடத்தில் புதன் ஆட்சியாக, உச்சமாக இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் உள்ளவர்கள் சிறந்த கல்வி அறிவு உள்ளவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட அமைப்பிலிருக்கும் புதனை, குரு பார்த்தால் பெரும் கல்விமானாகப் பெயர் எடுத்து, கல்வி நிறுவனங்கள் நிறுவி, கல்விப் பணி ஆற்றுவார்கள். அத்துடன் குருவும் சேர்ந்து பலம் பெற்று இந்த அமைப்புள்ளவர்கள் கல்வி மந்திரியாக இருந்தால், அந்த நாட்டின் கல்வி நிலை எல்லா நாடும் போற்றும்படி இருக்கும். அவர் எடுக்கும் நடவடிக்கைகளால் கல்வியின் தரம் உயர்ந்து சிறந்த கல்விமான்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். யாருக்கும் பயப்படாமல் அவர் முடிவுகள் எடுப்பார். கல்விச் சாலைகள் பெருகும். அடிப்படை அறிவு மக்களுக்குக் கிடைக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் பெறுவார்.

5.சந்திரமங்கள யோகம் :

ஜாதகத்தில், செவ்வாய், சந்திரனுக்கு அதாவது ராசிக்குக் கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 – வது வீட்டில் நின்றால் இந்த யோகம் ஏற்படும். இது திருமணத்துக்குப் பிறகு ஜாதகனுக்கு நல்ல உயர்ந்த அந்தஸ்தைத் தரும்.

6.கஜ கேசரி யோகம்:

ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4-ம் வீட்டில் அல்லது 7-ம் வீட்டில், அல்லது 10-ம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசியலில் உயர் பதவி, அரசாங்கத்தில் உயர் பதவி, கல்வியில் உயர்வு, ஆகியவை ஏற்படும். மேலும், சொந்தமாக பல வீடுகள், வாகன யோகங்களையும் தரும். அதே சமயம் எதிரிகளும் உருவாகுவார்கள். ஆனால், அவர்கள் இவர்களிடம் தோற்றுபோவார்கள்.

astro

7. தர்ம கர்மாதிபதி யோகம்:

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் அவரின் லக்னத்துக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பத்தாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து நின்றால், இந்த யோகம் ஏற்படும். இந்த அமைப்பு உள்ளவர்கள் வாழ்க்கையில் உயர்வு பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். அறக்கட்டளைகள், தர்ம ஸ்தாபனங்கள் நிறுவி, பொதுத்தொண்டு செய்வார்கள். ஆலயப் பணி செய்வார்கள். கோயில் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்புகள் வந்துசேரும். தன் சொந்த செலவில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யக்கூடிய தகுதி உண்டாகும். சிலர் தினமும் அன்னதானம் செய்வார்கள். தன் சொத்தில் ஒரு பகுதியை கோயில் திருப்பணிக்காக எழுதியும் வைப்பார்கள்.

8. குரு சந்திர யோகம்:

சந்திரனுக்கு திரிகோணம் எனப்படும் 5-ம் வீட்டில் , 9 – ம் வீட்டில் குரு இருந்தால், இந்த யோகம் ஏற்படும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் தங்களுடைய 40 -வது வயதுக்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.

9. ஹம்ஸ யோகம்:

ஜாதகத்தில் குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும் 4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு மக்களிடம் மதிப்பு இருக்கும். இந்த அமைப்புடன், சூரியனும் செவ்வாயும் பலம் பெற்றால், அந்த ஜாதகர் ஒரு மிகச் சிறந்த ஒரு நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு அரசியல் தலைவராகப் பெயர் எடுப்பார். மக்களிடம் அதிக செல்வாக்கும் உடையவராகத் திகழ்வார். இந்த யோகத்தோடு ராஜ கேந்திரயோகம் எனப்படும் யோகம் ஏற்பட்டால், அதாவது எல்லா கிரகங்களும் கேந்திரத்தில் பலமானால், அவரை யாராலும் அசைக்க முடியாத ஓர் ஒப்பற்றத் தலைவனாகப் பெயரெடுப்பார்.

10. அரசாளும் யோகம்:

ஒரு ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் பலம் பெற்று, லக்னத்துக்கு 6, 7, 9 – ம் இடத்து அதிபதிகள் ஆட்சி பெற்றிருந்தால், தன்னுடைய சிறிய வயதிலேயே அரசியலில் பெரும்புகழ் பெற்று அரியணையில் அமர்வார்.