ஒருவர் செய்யும் வேலையிலோ, தொழிலிலோ முன்னேற்றம் ஏற்பட்டால் தான் அவர்களுடைய வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்படி கஷ்டப்பட்டு ஒரு வேலையில் சேர்ந்தாலோ அல்லது ஒரு தொழிலை ஆரம்பித்தாலோ நமக்கே தெரியாமல் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்யும் அளவிற்கு மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சினைகள் நீங்குவதற்கு முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
முருகர் வழிபாடு
ஒருவரிடம் நாம் அறிமுகமாகும் பொழுது முதலில் அவருடைய பெயரைக் கேட்போம். அதற்கு அடுத்தார் போல் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை தான் கேட்போம். அந்த வேலையை பொறுத்து தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையும் இருக்கும். சாதாரண ஒரு வேலையில் சேர்ந்து படிப்படியாக அதில் முன்னேறி ஒரு உயரிய நிலையை அடைவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அதேபோல் எடுத்தவுடன் உயரிய நிலையை அடைவதற்குரிய வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அப்படி நாம் உயரிய நிலையை அடைவதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் ஒரு சிலர் நம்மை விட முன்னேற கூடாது என்ற ஒரு கெட்ட எண்ணத்தினால் பல தீமைகளை செய்வார்கள். இந்த தீமைகளால் நம்முடைய வேலையிலோ தொழிலிலோ ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் தடைப்பட்டு நின்றுவிடும். இந்த சூழ்நிலையில் நமக்கு உதவி செய்யும் கடவுளாக திகழ்பவர் தான் முருகப்பெருமான்.
பொதுவாக முருகப்பெருமானை கடன் பிரச்சினை தீருவதற்கும், சொந்தமாக இடம் வாங்க வேண்டும் அல்லது இடம் விற்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக தான் வழிபாடு செய்வார்கள். ஆனால் நம்முடைய தொழிலிலோ வேலையிலோ நம்மை முன்னேற விடாமல் தடுக்கக்கூடிய எதிரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நீங்கவும் அந்த எதிரிகளின் தொல்லை விலகவும் நம் முருகப்பெருமானை வழிபடலாம்.
இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு போக வேண்டும். அவ்வாறு போகும்பொழுது உங்களால் இயன்ற அளவு செவ்வாழை பழத்தை வாங்கிக் கொண்டு போக வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழங்களையாவது வாங்கிச் செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய முருகப் பெருமானுக்கு இந்த செவ்வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள்.
பிறகு “ஓம் சத்ரு சம்ஹார சுப்ரமணிய சுவாமியே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை உங்களால் இயன்ற அளவு குறைந்தபட்சம் 27 இல் இருந்து அதிகபட்சம் 108 முறை வரை கூறலாம். இவ்வாறு கூறிவிட்டு நெய்வேத்தியமாக வைத்த அந்த செவ்வாழை பழங்களை எடுத்து அந்த கோவிலுக்கு வரும் அனைவருக்கும் தானமாக தரவேண்டும். ஒரே ஒரு பழத்தை மட்டும் அவர்கள் உண்ண வேண்டும்.
இப்படி தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகள் முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் வேலை மற்றும் தொழிலில் இருக்கக்கூடிய தடைகளும், எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளும் நீங்கி நல்ல முன்னேற்றமான வாழ்க்கை கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: காரிய வெற்றி ஏற்பட ஏலக்காய் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கி நல்லதொரு முன்னேற்றமான வாழ்க்கை அமையும்