அட! இட்லி செய்வதற்கு இனி மாவு அரைக்க வேண்டாமா? இந்த ரெடிமேட் இட்லி பொடியை தயார் செய்து வைத்துக் கொண்டாலே போதும். சோடா உப்பு வேண்டாம்! ஈனோ சால்ட் வேண்டாம்!

idli-rava1

இட்லி செய்வதற்கு அரிசி உளுந்து ஊற வைத்து, கிரைண்டரிலோ மிக்ஸியிலோ, மாவு அரைக்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. ரெடிமேடாக சில பொருட்களை வாங்கி, கலந்து இட்லி பொடியை தயார் செய்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டாலே போதும். தேவையானபோது இட்லியை செய்துகொள்ளலாம். இந்த ‘ரெடிமேட் இட்லி பொடி’ எப்படி தயார் செய்வது? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? தயாரித்த ரெடிமேட் இட்லி பொடியில் இருந்து சுவையான இட்லியை செய்வது எப்படி? என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

idli-rava

தேவையான பொருட்கள்: இட்லி ரவை – 1 கப், நைசாக அரைத்த உளுந்து பொடி – 1/2 கப், அவல் பொடித்தது – 1/2 கப்.

இட்லி அரிசியை பொடியாக அரைத்து, ‘இட்லி ரவை’ என்றே நமக்கு கடைகளில் கிடைக்கின்றது. இது உப்புமாவுக்கு பயன்படுத்தும் ரவை அல்ல. இட்லி அரிசியிலிருந்து தயார் செய்யப்பட்ட ரவை. இட்லி ரவை என்று கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் உளுந்தை, கடாயில் போட்டு முதலில் வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சிவப்பு நிறம் வரும் அளவிற்கு வறுக்கக் கூடாது. உளுந்து வெள்ளை நிறத்தில் தான் இருக்கவேண்டும். ஆனால் உளுந்து நன்றாக சூடாக வேண்டும்.

idli-rava2

வறுத்த இந்த உளுந்து, நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே மிக்ஸி ஜாரில் அவளையும் போட்டு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது இட்லி ரவை 1 கப், அரைத்த உளுந்து மாவு 1/2 கப், அரைத்த அவள் 1/2 கப், இந்த மூன்றையும் ஒன்றாக போட்டு நன்றாக கலந்து, காற்றுப்புகாத ஈரம் இல்லாத டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ‘ரெடிமேட் இட்லி பொடி’ தயார். இந்த பொடியை தேவையான போது, தேவையான அளவுகளில் எடுத்து கரைத்து, இட்லி செய்ய வேண்டியதுதான். இந்த இட்லி பொடி 3 மாதங்கள் வரைகூட கெட்டுப் போகாது.

idli-rava3

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ரெடிமேட் இட்லி பொடியில் இருந்து 1 கப் அளவு மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதே கப்பில் 1 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு வைத்து விடுங்கள்.

idli-mavu1

இது 8 லிருந்து 10 மணி நேரம் புளிக்க வேண்டும். இரவு இட்லி செய்ய மாவு தேவை என்றால், இந்த கலவையை காலையிலேயே தண்ணீரில் ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலையில் இட்லி தேவை என்றால், இரவு இந்த ரெடிமேட் இட்லி பொடியில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து விட்டால் போதும்.

Idli

மறுநாள் காலை இந்த மாவு புளித்து  இட்லி வார்ப்பதற்கு தயாராக இருக்கும். இட்லி தட்டில் கொஞ்சமாக எண்ணையை தடவி, ரெடிமேட் இட்லி மாவில் தயாராக இருக்கும் இந்த மாவை, அப்படியே இட்லி தட்டில் வார்க்க வேண்டும். ஆவியில் 10 லிருந்து 12 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் பஞ்சு போல இட்லி ரெடி. உங்க வீட்லயும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க!