5 நிமிடத்தில் சுவையான போண்டா செய்வதற்கு வேறு எதையும் தேடாதீர்கள், வீட்டில் 1 கப் இட்லி மாவு இருந்தால் போதுமே!

idli-maavu-bonda
- Advertisement -

திடீரென ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கொஞ்சம் இட்லி மாவுடன் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து போண்டா மாவு தயாரித்து போண்டா சுட்டு எடுத்தால் போதும்! ஐந்தே நிமிடத்தில் உங்களுக்கு நாவூறும் சுவையான கார போண்டா தயார்! போண்டா செய்வதற்கு எதையும் இனி தேட வேண்டாம், இட்லி மாவு ஒன்றே போதும்! இட்லி மாவு போண்டா சுட சுட தயார் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்

இட்லி மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, இட்லி மாவு – கால் கிலோ, அரிசி மாவு – 50 கிராம், பெரிய வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2, துருவிய இஞ்சி – அரை டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, கொத்தமல்லி – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

இட்லி மாவு போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் எல்லாவற்றையும் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கால் கிலோ இட்லி தோசை மாவு ஒரு பவுலில் ஊற்றி கொள்ளுங்கள். அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

- Advertisement -

பின்னர் பொடிப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, ரொம்பவும் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி கலந்து கொள்ளுங்கள். பின்னர் இட்லி மாவில் இருக்கும் புளிப்பு தன்மையை எடுக்கவும், அதனால் வரக் கூடிய அஜீரணக் கோளாறுகளை தவிர்க்கவும் மிளகு மற்றும் சீரகத்தை லேசாக ஒன்றிரண்டு முறை தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் வாய்வு கோளாறுகளை நீக்க பெருங்காயத்தூள் கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.

அதன் பின்பு தேவையான அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மாவிற்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நறுக்கிய கறிவேப்பிலை தூவி கைகளால் நன்கு கலந்து கொள்ளுங்கள். போண்டா மாவு பதத்திற்கு கெட்டியாக வர வேண்டும் அந்த அளவிற்கு நன்கு கலந்த பின்பு மாவை கொஞ்சம் கையில் எடுத்து கீழே போட்டு பாருங்கள் ‘தொப்’ என்று விழும். அப்போது தான் போண்டா மாவு சரியான பதத்தில் இருக்கிறது என்று அர்த்தம். அதற்கு ஏற்ப அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் போண்டா சுடுவதற்கு ஏற்ப எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றுங்கள்.

எண்ணெய் சூடேற்றிய பின்பு மிதமான தீயில் வைத்து கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ஒவ்வொரு உருண்டைகளாக எண்ணெயில் போடுங்கள். தண்ணீரைத் தொட்டுக் கொண்டால் தான் மாவு கையில் ஒட்டாமல் வரும். எல்லா புறமும் நன்கு சிவக்க வேக பொறுமையாக வேக வைத்து எடுங்கள். அதன் பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரில் பரிமாறி சுடசுட காரச்சட்னி அல்லது தேங்காய் சட்னி வைத்து கொடுத்தால் பிரமாதமாக இருக்கும். இட்லி மாவு கொண்டு நொடியில் போண்டாவை நீங்களும் இதே மாதிரி தயார் செய்து அசத்துங்கள்.

- Advertisement -