இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? 1 கப் இட்லி அரிசி மட்டும் இருந்துச்சுன்னா இது மாதிரி உப்பு கொழுக்கட்டை உடனே செஞ்சு பாருங்க காலை உணவு அற்புதமாக மாறும்!

idli-rice-kolukattai
- Advertisement -

சதா இட்லி, தோசை என்று சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு இது போல காலை உணவை அற்புதமாக மாற்றி கொடுக்கக் கூடிய கொழுக்கட்டை உணவுகளை எளிய முறையில் செய்து சாப்பிட்டால் ரொம்பவே பிடிக்கும். இட்லி அரிசியை மட்டும் அரைத்து செய்யும் இந்த உப்புக் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு ரொம்பவே ஆரோக்கியமானதாகவும், வயிறு நிரம்பும் படியாகவும் இருக்கும். இட்லி அரிசி உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இட்லி அரிசி உப்பு கொழுக்கட்டை செய்ய முதலில் ஒரு கப் அளவிற்கு இட்லி அரிசியை நன்கு சுத்தம் செய்து அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் அரிசி நன்கு ஊறிய பின்பு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அதிகம் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

உளுந்துக்கு கெட்டியாக அரைப்பது போல தண்ணீரை தெளித்து தெளித்து இட்லி அரிசியை மட்டும் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை, இன்ஸ்டன்ட் ஆக செய்து விடலாம், எனவே அதிக நேரம் எடுக்காது. இட்லி அரிசியை கெட்டியாக எடுத்த பின்பு இப்போது அரை கப் அளவிற்கு தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தேங்காய் துருவலை இட்லி அரிசியுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். மாவு அரைக்கும் போதே உப்பு போட்டு அரைத்தால் நன்று. பின் இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகள் பிடித்து கொள்ளுங்கள். பால் கொழுக்கட்டைக்கு பிடிப்பது போல ரொம்பவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். வட்ட வடிவத்தில், நீள வடிவத்தில் என்று உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் சின்னதாக எல்லா மாவையும் உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸி அல்லது கிரைண்டர் கழுவிய தண்ணீர் இதை வேக வைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம், எனவே அதை கீழே ஊற்றி விடாதீர்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு இட்லி பானையை வைத்துக் கொள்ளுங்கள், அல்லது ஏதாவது ஒரு மூடியுடன் கூடிய பாத்திரத்தை எடுத்து வைத்து கொள்ளுங்கள். பாத்திரத்தில் நீங்கள் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் இந்த கொழுக்கட்டைக்கு தேவையான அளவிற்கு கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடுங்கள்.

இந்த தண்ணீரிலும் தேவையான அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும் எனவே உப்பை கொழுக்கட்டைக்கும், இந்த தண்ணீரிலும் பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்த பின்பு இந்த உருண்டைகளை எல்லாம் எடுத்து போட்டு மூடி வைத்து விடுங்கள். ஐந்திலிருந்து ஏழு நிமிடத்துக்குள் நன்கு உருண்டைகள் அனைத்தும் வெந்து தண்ணீர் கெட்டியாக உங்களுக்கு மாறிவிடும். அவ்வளவுதாங்க அதை வெதுவெதுப்பான சூட்டில் காலை உணவுக்காக அப்படியே எடுத்து ஒரு சிறு சிறு கிண்ணங்களில் பரிமாறி ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்து பாருங்கள், ரொம்பவே விரும்பி ரசித்து ருசித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடுவார்கள்.

- Advertisement -