இட்லி தட்டில், துணி போட்டு இட்லி ஊற்றும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அந்த இட்லி துணியில், இட்லி ஒட்டாமல் இருக்க என்ன செய்வது?

இட்லி ஊற்றுவதற்கு பக்குவமாக மாவு அரைப்பது ஒரு கஷ்டம் என்றால், அந்த இட்லி மாவை, இட்லி சட்டியில் பக்குவமாக ஊற்றி எடுப்பதும், ஒரு கலைதான். ஏனென்றால், சில பேருக்கு இட்லி தட்டில் போட்ட துணியிலேயே, பாதி இட்லி ஒட்டிக்கொள்ளும். சிலபேருக்கு, அடித்தட்டு இட்லியில் தண்ணீர் ஏறிக்கொண்டு, கொழகொழவென்று தண்ணீர் விட்டது போல, இட்லி மாறி விடும். இந்த இட்லியை, இட்லி சட்டியில் பக்குவமாக எப்படி தான் வேகவைத்து எடுப்பது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Idli

முதலில், நீங்கள் இட்லி ஊற்றுவதற்கு பயன்படுத்தப் போகும் துணி, காட்டன் துணையாக இருக்க வேண்டும். அது ரேஷன் கடையில் தந்த வேட்டி துணியாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அப்படி இல்லை என்றால், கடைகளில் காடாத்துணி என்று விற்கும். அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் துணியை புதியதாக எல்லோரும் வாங்கிய பின்பு முதலில், கஞ்சி போக துவைத்துக் கொள்வார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.

முதலில் இட்லி சட்டியில், தேவையான அளவு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதி வரும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும். இந்த இடத்தில் இட்லி சட்டி, தீய்ந்து போகுமே என்று, தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது. இட்லி சட்டியில் இரண்டு இன்ச் அளவு தண்ணீர் இருந்தால் மட்டும் போதும். கொதிக்கின்ற இந்தத் தண்ணீரில், முதலில் இட்லி துணியை போட்டு, தண்ணீரை துணியிலிருந்து பிழிந்து விடுங்கள்.

idli3

கொதிக்கின்ற தண்ணீரில் துணியை முக்கி எடுத்து, பிழிந்து, இட்லி ஊற்றினால், இட்லி எக்காரணத்தைக் கொண்டும் துணியில் ஒட்டிக் கொள்ளாது. எப்பவும் போல் உங்கள் வீட்டில் இரண்டு தட்டு இருந்தாலும், மூன்று தட்டு இருந்தாலும், அதில் மாவை ஊற்றிக் கொள்ள வேண்டும். இட்லி சட்டியில் அடியில் வைக்கும், இட்லி தட்டை முதலில் வைத்து, அதன் மேல் சரியான அளவு தட்டை மூடிவிடுங்கள். மேலே கொடுத்திருக்கும் படத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது, மேலே மற்றொரு தட்டை வைக்கும்போது, இட்லி வேகும் சமயத்தில், மேல்தட்டில் இருக்கும் ஆவி, கீழ்தட்டு இட்லியில் படாது. கீழே இட்லி சட்டியில் தண்ணீரின் அளவு சரியாக இருந்தால், மேலே இருக்கும் தட்டில் தண்ணீர் ஏராது. குறிப்பாக இட்லி சட்டியில் தட்டை வைத்ததும் உங்களது அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இப்போது உங்களுக்கு அடிதட்டு இட்லியும் கொளகொளவென்று ஆகாமல், மேல் தட்டு இட்லி போலவே சூப்பராக வரும்.

idli2

இட்லி வெந்தவுடன் பக்குவமாக மேலே கவிழ்த்து இருக்கும் தட்டை எடுத்து, இட்லி தட்டுகளை வெளியே எடுத்து, இரண்டு நிமிடங்கள் ஆற வைத்த பின்பு, தண்ணீர்கூட தெளிக்க வேண்டாம். இட்லி சாஃப்ட்டா துணியில் இருந்து தானாகவே பிரிந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க! உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
10 நிமிடத்தில் ஆரோக்கியமான லஞ்ச் பாக்ஸ், சாப்பாடு தயார்! சூப்பரான பூண்டு சாதம் செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.