உருளைக்கிழங்கும், கோதுமை மாவும் இருந்தால் 10 நிமிடத்தில் இந்த மொறு மொறு தோசை தயார். ஃப்ரிட்ஜில் தோசை மாவு காலி என்னும் சமயத்தில் இந்த தோசை உங்களுக்கு கை கொடுக்கும்.

dosai
- Advertisement -

எப்போதும் அரிசி மாவு உளுந்து மாவு போட்ட தோசையை சாப்பிட்டு போர் அடிக்குதா. கொஞ்சம் இப்படி வித்தியாசமாக தோசையை சுட்டு சாப்பிட்டு பார்க்கலாமே. உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், கோதுமை மாவும் இருந்தால் சட்டுனு பத்து நிமிடத்தில் இந்த இன்ஸ்டன்ட் தோசையை செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நேரத்தை கடத்தாமல் ருசி தரும் அந்த தோசை ரெசிபி என்ன என்று பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை 

முதலில் ஒரு மீடியம் சைஸில் இருக்கும் உருளைக்கிழங்கை தோல் சீவி, துருவி கொள்ளுங்கள். கேரட் பீட்ரூட் துருவுவோம் அல்லவா, அதேபோல இந்த உருளைக்கிழங்கையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு தான். வேகவைத்தது அல்ல. இதை தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஸ்டார்ச் எல்லாம் தண்ணீரில் போய்விடும். இப்ப பிழிந்த உருளைக்கிழங்கு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு அகலமான பௌலில் 1 கப் அளவு கோதுமை மாவு போட்டுக் கொள்ளவும். அதில் 1/2 கப் அளவு ரவை சேர்த்து துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும், இதில் போட்டு, தேவையான அளவு உப்பு, 3 கப் அளவு தண்ணீர் இதில் ஊற்ற வேண்டும். எந்த கப்பில் கோதுமை மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே கப்பில் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி, கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை கரைத்துக் கொள்ளலாம்.

அடுத்து இந்த மாவில் பொடியாக துருவிய இஞ்சி துருவல் 1 ஸ்பூன், சில்லி ஃப்ளக்ஸ் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிதளவு, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், எல்லாவற்றையும் போட்டு கலந்து ஒரு மூடி போட்டு பத்து நிமிடங்கள் ஊற வைத்தால் சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார்.

- Advertisement -

இதை எப்படி தோசை கல்லில் வார்ப்பது. அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடு செய்து கொள்ளுங்கள். கல் நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, ஒரு டம்ளரில் இந்த தோசை மாவை எடுத்து, ரவா தோசை போல ஊற்ற வேண்டும். ஆனால் ஓட்டைகள் இல்லாமல் மெல்லிசாக ஊற்றி, மேலே தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடம் வேக வைத்தால் தோசை மொறு மொறுப்பாக சிவந்து சூப்பராக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வடை மாவை இதுவரைக்கும் கையால் தொட்டதே இல்லை என்பவர்கள் கூட, 1 நிமிஷத்துல, 100 உளுந்து வடை போடலாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா.

திருப்பி போட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. இந்த தோசையை அப்படியே எடுத்து ருசித்துப்பாருங்கள். மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும். காரசாரமான இதற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்த தேங்காய் சட்னி இருந்தாலும் சூப்பரான டிபன் ரெடி.

- Advertisement -