என்னதான் காலையில் குளித்து விட்டு, மாலையில் ஒருமுறை முகம் கழுவினாலும் சில நேரங்களில் நமது முகம் ஃபிரஷ்ஷாக இல்லாமல் இருப்பது போல் தோன்றும். அதுமட்டுமல்லாமல் தினமும் வெளியில் சென்று வருபவர்கள் தங்கள் முகத்தை சரியாக பராமரிக்க முடிவதில்லை. காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் ஓய்வு எடுக்க தான் தோன்றும். அவர்களின் அழகைப் பராமரிப்பதற்கு நேரம் செலவிட முடியாது. ஆனால் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ நமது முகத்தை நிச்சயம் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே முகத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்கள், கருப்புத் திட்டுக்கள் அகன்று முகம் பளிச்சென்று மாறும். இதற்காக நேரம் அதிகம் செலவிடாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த இன்ஸ்டன்ட் ஃபேசியல் மாஸ்க்கை உபயோகப்படுத்தி பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, ஜெலட்டின் – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு காய் துருவலை பயன்படுத்தி உருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு, அதனை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி துருவிய உருளைக்கிழங்கு துருவலை வடிகட்டியில் வைத்து பிழிந்து சாறு எடுத்து வைக்க வேண்டும். அதேபோல் கேரட்டையும் துருவி வடிகட்டியை பயன்படுத்தி சாறு எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் உருளைக்கிழங்கு சாறு மற்றும் கேரட் சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவற்றுடன் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடர் கலந்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள இந்த இரண்டு சாறுகள் உள்ள கிண்ணத்தை சுடுதண்ணீரின் மீது வைக்க வேண்டும்.
இவ்வாறு இந்த கலவையை டபுள்பாய்லிங் மட்டும் செய்ய வேண்டுமே தவிர நேரடியாக அடுப்பின் மீது வைத்து சூடு செய்யக்கூடாது. சிறிது நேரத்தில் இருக்கும் கலவையில் சேர்த்துள்ள ஜெலட்டின் பவுடர் முழுவதுமாக கரைந்து அனைத்தும் ஒரு திரவ நிலையில் வந்துவிடும். பின்னர் அடுப்பை அனைத்துவிட்டு, கிண்ணத்தை வெளியே எடுத்து சிறிது நேரம் ஆற விட வேண்டும்.
பிறகு இந்த கலவை சற்று வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது ஒரு ஃபேசியல் பிரஷ்ஷை பயன்படுத்தி முகத்தில் இந்த சாறு முழுவதையும் தடவி விட வேண்டும். பின்னர் இவை நன்றாக ஆறி முகம் முழுவதும் சற்று இருக்கமாக மாறியதும் இதனை மெதுவாக உறித்து எடுக்க வேண்டும். அப்பொழுது முகத்தில் இருக்கும் சிறு சிறு உரோமங்கள் மற்றும் கருப்புத் திட்டுக்கள் அனைத்தும் முழுவதுமாக அகன்றுவிடும். முகமும் நன்றாக பளிச்சென்று மாறிவிடும். பின்னர் சாதாரண தண்ணீரில் ஒரு முறை முகத்தை லேசாக கழுவ வேண்டும்.