இறப்பு என்பது எழுதப்பட்ட விதியாகும். விஞ்ஞானம் எத்தகு வளர்ச்சி உற்றாலும், மனிதனை சாவில் இருந்து காப்பாற்ற அவனால் முடியாது. இத்தகைய மரணத்தைக் கூட தடுத்து நிறுத்தக்கூடிய புண்ணிய காரியம் ஒன்று உண்டு. பெரிய பெரிய ஞானிகள், ரிஷிகள், சித்தர்களும் கூட இப்படி இருப்பதால் தான் அவர்கள் சாகா வரம் பெற்றனர். மரணத்தை வெல்லும் ரகசியம் என்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
ஒரு ஊரில் பிரசித்தி பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார். இவர் கணித்தால் கணித்தது அப்படியே நடக்கும். சரியான முறையில் ஜோதிடத்தில் கற்று தேர்ந்த இந்த ஜோதிடர் புகழானது, ஊரெங்கும் பரவியது. வெவ்வேறு இடங்களில் இருந்து மக்கள் இவரை காண வந்து சென்ற வண்ணம் இருப்பார்கள். அப்படி ஒரு நாள் ஏழை விவசாயி ஒருவர் பக்கத்து ஊரிலிருந்து ஜோதிடரை பார்க்க வந்திருந்தார்.
விவசாயி தன்னுடைய ஜாதகத்தை காண்பித்து தன் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று கணித்து கூற கேட்டார். ஜாதகத்தை வாங்கி பார்த்த ஜோதிடருக்கு ஒரே அதிர்ச்சி. இன்று இரவே அவருடைய ஆயுள் முடியப் போவதாக ஜோதிடருக்கு தெரிய வந்தது. இதைப் பார்த்ததும் மன வருத்தம் அடைந்த ஜோதிடர் உங்கள் ஜாதகம் என்னிடம் இருக்கட்டும், நாளை காலை இதே நேரம் வாருங்கள் தற்போது ஒரு முக்கியமான வேலை இருக்கிறது மறந்தே போய் விட்டேன் என்று கூறி நைசாக அவரை அனுப்பி விட்டார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜோதிடரின் மனைவி சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து ஏன் அவரை இப்படி கூறி அனுப்பி வைத்தீர்கள்? என்று கேட்டார். இன்று இரவோடு அவர் ஆயுள் முடியப் போகிறது நாளை அவரால் என்னை வந்து சந்திக்க இயலாது. அதனால் தான் அப்படி கூறினேன் என்று பதில் அளித்தார்.
இரவு கடும் மழை பெய்ததால் விவசாயி ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஒரு பாழடைந்த கோவிலுக்கு சென்று தஞ்சம் புகுந்தார். கோவிலை பார்த்த விவசாயிக்கு வருத்தமாக இருந்தது, ஒரு காலத்தில் இந்த கோவிலில் கும்பாபிஷேகமும், திருவிழாவும் நன்றாக நடந்திருக்கும் போல் தெரிகிறது, பெரிய கோவில் ஆக இருக்கிறது, இன்று சிதிலமடைந்து போயிருக்கிறதே என்று எண்ணியபடி அப்படியே கோவில் தூணில் சாய்ந்து அயர்ந்து விட்டார். அவருக்கு கனவில் இதே கோவிலை விவசாயி புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து கோலாகலமாக திருவிழா நடத்துவது போல கண்டார். திடீரென ஒரு சத்தம் கேட்டு முழித்து பார்த்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தலைக்கு மேலே ஒரு கருநாகம் கொத்த தயாராக இருந்தது. சட்டென கோவிலை விட்டு வெளியே வந்ததும் கோவில் மண்டபம் முழுவதுமாக இடிந்து விழுந்து சரிந்தது.
கருநாகம் இல்லை என்றால் கோவில் இடிந்து விழுந்ததில் விவசாயி இறந்து போயிருப்பார். மறுநாள் ஜோதிடரை பார்க்க விவசாயி வந்ததும், ஜோதிடர் தன் கணிப்பு தான் சரியாக இல்லையோ என்று நினைத்து மீண்டும் ஜாதகத்தை எடுத்து நன்கு புரட்டிப் பார்த்தார். தன் ஜாதக கணிப்பு சரியாகவே இருந்தது. பின் எப்படி விவசாயி மரணத்திலிருந்து தப்பித்தார்? என்று புரியாமல் திகைத்தார்.
இதையும் படிக்கலாமே:
27-09-2024 சுக்கிர ஜெயந்தி மந்திரம்
விவசாயியிடம் ஏதாவது வித்தியாசமாக நேற்று நடந்ததா? என்று கேட்டதும், விவசாயி நடந்ததை கூறினார். இதிலிருந்து மனதால் இறைவனுக்கு தொண்டு செய்ய நினைத்தாலே போதும், அதைவிட ஒரு புண்ணிய காரியம் எதுவுமே இல்லை. இந்த புண்ணியம் மரண கண்டத்திலிருந்து கூட நம்மை காக்கும் அரணாக இருக்கும் என்று ஜோதிடர் புரிந்து கொண்டார். ஒருவர் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று விதியே எழுதப்பட்டு இருந்தாலும், கடவுளுக்கு தொண்டு செய்து வந்தால் அவரை வெல்ல எவராலும் முடியாது.