ஒரு வருடத்திற்கு சில மாதங்கள் மட்டுமே சில வகையான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக கிடைக்கும். அவ்வாறு இன்றைய மாதத்தில் பலாப்பழம் அதிக அளவில் கிடைக்கிறது. இவற்றை அப்படியே சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த பலாப்பழம் வைத்து பாயாசம், அல்வா போன்ற உணவுகளையும் சமைக்க முடியும். அப்படி சட்டென செய்யக்கூடிய, சுட சுட அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த குழி பணியாரமும் செய்ய முடியும். இதனை ஒருமுறை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் மறுபடியும் எப்போது செய்வீர்கள் என்று தொல்லை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். மாலை டீ குடிக்கும் நேரத்தில் இதனையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அவ்வளவு சூப்பராக இருக்கும் .இந்த பலாப்பழ பணியாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பலாப்பழம் – 10 துண்டு, அரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – அரை கப், ஏலக்காய் – 2, எண்ணெய் – 7 ஸ்பூன், சர்க்கரை – 5 ஸ்பூன்.
செய்முறை:
முதலில் பத்து துண்டு பலா பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப்பற்றுள்ள பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு மற்றும் அரைத்த கோதுமை மாவில் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு இனிப்பு சுவைக்கு ஏற்ப 5 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு ஏலக்காயை பொடி செய்து சேர்க்க வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்டு, இவற்றுடன் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து அனைத்தையும் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பணியார கல்லை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழியிலும் கரைத்து வைத்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பணியாரம் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை மூடி வைத்து 5 இலிருந்து 7 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். பிறகு இவை சிவந்து வர ஆரம்பித்ததும் திருப்பிப் போட்டு மறுபடியும் ஐந்து நிமிடத்திற்கு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பலாப்பழ பணியாரம் தயாராகிவிடும். சுட சுட அனைவரும் சாப்பிடக் கொடுத்தால் ஒன்று கூட மிச்சமில்லாமல் அனைத்தும் தீர்ந்துவிடும்.