ஜவ்வரிசி கிச்சடி செய்முறை

javvarisi kichadi
- Advertisement -

இட்லி, தோசைக்கு மாற்றாக நம்முடைய வீட்டில் செய்யக்கூடிய ஒரு உணவுதான் உப்புமா அல்லது கிச்சடி. காய்கறிகள் ஏதும் போடாமல் செய்யக்கூடியதை உப்புமா என்றும் காய்கறிகள் போட்டு செய்வதை கிச்சடி என்றும் கூறுவோம். இதை பொதுவாக ரவை, சேமியா சில நேரங்களில் அரிசியை உடைத்து அரிசி உப்புமாவாகவும் செய்வோம். இதை தவிர்த்து ஜவ்வரிசியை வைத்தும் நாம் உப்புமா அல்லது கிச்சடி செய்ய முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஜவ்வரிசி கிச்சடி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

ஜவ்வரிசி என்பது மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக அளவு ஸ்டார்ச் இருக்கிறது. சீத பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஜவ்வரிசியை சாப்பிடுவதன் மூலம் அதன் தாக்கத்திலிருந்து குறைய முடியும். அல்சர் குணமாகும். இதில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவு இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக திகழ்கிறது. மேலும் ஹீமோகுளோபின் அளவு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கப்படுகிறது. பற்களும், எலும்புகளும் உறுதியாகிறது. இதயம் சீராக இயங்குகிறது. நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • ஜவ்வரிசி – 250 கிராம்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1 1/2 டீஸ்பூன்
  • உளுந்து – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3
  • இஞ்சி – 1 இஞ்ச்
  • கருவேப்பிலை – 2 இனுக்கு
  • வேர்க்கடலை – 2 1/2 கைப்பிடி
  • பச்சை பட்டாணி – 50 கிராம்
  • உருளைக்கிழங்கு – 1
  • பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்,
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஜவ்வரிசியை குறைந்தது 5 மணி நேரமாவது ஊற வைத்து விட வேண்டும். காலையில் செய்வதாக இருந்தால் முதல் நாள் இரவே ஊற வைத்து விடலாம். ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் காய்த்ததும் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு உளுந்து இவற்றை சேர்க்க வேண்டும். உளுந்து சிவந்த பிறகு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்க்க வேண்டும். இதனுடன் கருவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும். ஒன்றரை கைப்பிடி அளவு வேர்கடலையை எடுத்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து அந்த பொடியையும் கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கைப்பிடி அளவு முழு வேர்க்கடலையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு வேகவைத்த பச்சைப்பட்டாணியை இதனுடன் சேர்க்க வேண்டும். அதேபோல் வேகவைத்த உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்த கடைசியாக நாம் ஊற வைத்திருக்கும் ஜவ்வரிசி இதில் சேர்க்க வேண்டும்.

ஜவ்வரிசியை சேர்த்த பிறகு அதிக அளவில் கிணற கூடாது. அப்படி கிளறினால் ஜவ்வரிசி குழைந்து விடும். லேசாக பிரட்டி மட்டும் விட்டுவிட்டு ஒரு ஸ்பூன் எண்ணெயை சுற்றி ஊற்றி மூடி போட்டு பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் லேசாக ஒரு கிளறு கிளறி இறக்கி விட வேண்டும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி பரிமாறி விடலாம். ஆரோக்கியமான ஜவ்வரிசி கிச்சடி தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஆரஞ்சு பழ தோல் ஊறுகாய் செய்முறை

பெண்களுக்கு பல பலன்களை தரக்கூடிய ஜவ்வரிசியை இந்த முறையில் கிச்சடி செய்து தருவதன் மூலம் சிறு குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -