ஆரஞ்சு பழ தோல் ஊறுகாய் செய்முறை

orange peel pickel
- Advertisement -

பொதுவாக பழங்களை உண்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக திகழ்கிறது. காரணம் பழங்களில் பல உயிர் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதே போல் தான் அந்த பழங்களில் இருக்கக்கூடிய தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதை முழுமையாக உணர்ந்து எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து பயன்படுத்தினால் அந்தத் தோலின் சத்தையும் நம்மால் பெற முடியும். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆரஞ்சு பழ தோலை வைத்து எப்படி ஊறுகாய் செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஆரஞ்சு பழத் தோலை ஆயுர்வேதத்தில் பல மருந்துகளுக்காக உபயோகப்படுத்துகிறார்கள். அதிலும் மிகவும் குறிப்பாக கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஆரஞ்சு பழத்தோலிற்கு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் வாயு, நெஞ்செரிச்சல், வாந்தி, அமிலவெடிப்பு போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. பசியை தூண்டவும், குமட்டலை தணிக்கவும் நன்றாக உதவுகிறது. சுவாச மண்டலத்தில் இருக்கக்கூடிய சளியை போக்க உதவுகிறது. வறட்டு இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமாகிறது. இரைப்பையில் அதிகப்படியாக சுரக்கக்கூடிய அமிலத்தை சரி செய்யவும், குடல் இயக்கத்தை பராமரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. மேலும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், தூக்கத்தை தூண்டவும் பயன்படுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பொடியாக நறுக்கிய ஆரஞ்ச் பழத்தோல் – ஒரு கப்
  • மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
  • புளி – ஒரு ஆரஞ்சு பழ அளவு
  • வெல்லம் – 1/2 கப்
  • நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வர மிளகாய் – 2
  • கருவேப்பிலை – 2 இனுக்கு

செய்முறை

முதலில் ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அதில் மிளகாய் தூளையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இது கொதிக்க ஆரம்பித்த பிறகு இதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்க வைத்திருக்கும் ஆரஞ்சு பழ தோலையும் சேர்த்து 15 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். பிறகு பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

- Advertisement -

இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்துவிட்டு பிறகு இறக்கி வைத்து விட வேண்டும். தாளிப்பதற்கு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி வெந்தயம், பெருங்காயம், வரமிளகாய், கருவேப்பிலை இவற்றை சேர்த்து இவை அனைத்தும் நன்றாக பொரிந்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஆரஞ்சு பழத்தோல் ஊறுகாயில் தாளித்ததை போட்டு விட வேண்டும்.

அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆரஞ்சு பழ தோல் ஊறுகாய் தயார் ஆகிவிட்டது. இதை அப்படியே ஒரு வாரம் வரை வைத்திருந்து பிறகு உபயோகப்படுத்தும் பொழுது இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கலந்த சட்னி செய்முறை

தேவையில்லை என்று தூக்கிப் போடும் ஆரஞ்சு பழத்தோலை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுதும் அழகு குறிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் பொழுதும் பல நல்ல பலன்களை நம்மால் பெற முடியும் என்பதால் இனிமேல் ஆரஞ்சு பழத்தோலை தூக்கி எறிய வேண்டாம்.

- Advertisement -