இனி வத்தல் எப்படி செய்ய வெயிலே வேண்டாம். வீட்டிலேஅமர்ந்து கொண்டு ஜாலியாக ஜவ்வரிசி வத்தல் செய்யலாம்.

- Advertisement -

முன்பெல்லாம் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் வெயில் காலம் வந்த உடனே வத்தல், ஊறுகாய், பொடி இப்படியானவற்றை எல்லாம் அரைத்து எடுத்து வைத்து விடுவார்கள். மழைக்காலங்களில் இது உபயோகமாக இருக்கும் என்று வெயில் இருக்கும் நாட்களிலே இதையெல்லாம் செய்து எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் அப்படி யாரும் செய்து வைத்துக் கொள்வதில்லை. ஏனெனில் அனைத்து காலங்களிலும் எல்லாமும், எல்லா இடத்திலும் கிடைக்கிறது. ஆனால் இன்னும் சிலர் இது போன்ற உணவுப் பொருள்களை வீட்டிலே செய்து தான் இது சாப்பிடுகிறார்கள். இது போன்றவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும். இனி வெயிலில் காய்ந்து கொண்டு வத்தல் போடாமல் வீட்டுக்குள்ளேயே ஜாலியாக பேன் காற்றில் அமர்ந்து கொண்டே வத்தல் ஊற்றலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி – 2 கப், பச்சை மிளகாய் – 5, சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஜவ்வரிசி நன்றாக அலசி தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு இரண்டு கப் ஜவ்வரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை அப்படியே ஒரு மூடி போட்டு ஊற வைத்து விடுங்கள். மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் ஜவ்வரிசி தண்ணீரும் சமமாக ஊறி இருக்கும். இதில் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். இந்த ஜவ்வரிசையில் ஊறிய தண்ணீரே போதும்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்து விடுங்கள். அடி கனமான குக்கராக இருக்க வேண்டும். அதில் ஒரு கப் ஜவ்வரிசிக்கு நான்கு கப் வீதம், மொத்தம் எட்டு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் சீரகத்தையும் அரை டீஸ்பூன் உப்பையும் சேர்த்து தண்ணீரை நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக சூடான உடன் அதாவது கொதிக்கும் பதத்திற்கு முன்பு, இந்த அரைத்து வைத்திருக்கும் ஜவ்வரிசி கஞ்சி அதில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். கட்டியாகி விடக்கூடாது நன்றாக கலந்ததும் கட்டி இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு அடுப்பை அணைத்து விட்டு குக்கர் மூடியை போட்டு மூடி வைத்து விடுங்கள். (அடுப்பை அணைத்து விடுங்கள்.) ஒரு மூன்று மணி நேரம் அப்படியே இருக்கட்டும் ஜவ்வரிசி நன்றாக ஆறி இருக்கும். இட்லி மாவு எடுத்து ஊற்றும் பதத்திற்கு இந்த ஜவ்வரிசி மாவு இருக்க வேண்டும் நீங்கள் சூட்டிலே அதை ஊற்றி மூடி வைத்ததால் அதிலே இந்த ஜவ்வரிசி வெந்து இருக்கும். அவ்வளவுதான் ஜவ்வரிசி வத்தலுக்கு மாவு தயாராகி விட்டது.

- Advertisement -

இப்போது இதை உங்கள் வீட்டில் ஒரு மெலிதான காட்டன் வேஷ்டியோ, புடவை துணியோ ஏதாவது ஒன்று இல்லை கவர் எதுவாக இருந்தாலும் அதை விரித்து இந்த மாவை எடுத்து குட்டி வத்தலாக ஊற்றி வைத்து விடுங்கள். இது அப்படியே உங்கள் வீட்டில் பேன் காற்றிலே ஆற விடுங்கள். அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை இது இப்படி காய வைக்க வேண்டும். வத்தல் நன்றாக மொறுமொறு வென்று காய்ந்த பிறகு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். ஜவ்வரிசி வத்தல் ரெடியாகிவிட்டது.

இனி இந்த வத்தல் செய்ய ஜவ்வரிசி காய்ச்சி வேகாத வெயிலில் வத்தலோடு சேர்ந்து நீங்களும் காய்ந்து போக வேண்டாம். வீட்டில் அமர்ந்து கொண்டு ஜாலியாக டிவி பார்த்த படியே இந்த வத்தலை போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -