நவராத்திரி கொலுவில் ஜெயலலிதா பொம்மை! சாஸ்திரம் சொல்வது என்ன?

navarathirii

செப்டம்பர் 21-ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. பெரும்பாலான வீடுகளில் கொலு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்கென விதவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வழக்கமான கொலு வைப்பதற்கென சில வரையறைகளை நம் முன்னோர் வகுத்து வைத்திருக்கிறார்கள். ஆயினும் இளம் தலைமுறை, தங்கள் கற்பனைக்கேற்ப விதவிதமான பொம்மைகளை வாங்கி வைத்து வித்தியாசமான கொலுக்களை அமைக்கிறார்கள்.

Navaratri

கடந்த சில வருடங்களில் அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் சிலைகள் விற்பனைக்கு வந்தன. அவற்றை வைத்து சுதந்திரப் போராட்ட காட்சிகளை கொலுவில் வைத்தார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் பொம்மை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினுடையது.

பச்சை, சிவப்பு என விதவிதமான வண்ணங்களில் சிலைகள் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில். ‘இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ஜெயலலிதாவின் பொம்மையை கொலுவில் வைப்பது ஆகம விதிகளுக்கு முரணானது’ என்ற குரலும் எழத் தொடங்கியிருக்கிறது.

Navaratri

பெரும்பாலானோர், ஜெயலலிதாவின் பொம்மையை ஆர்வத்தோடு வாங்கிவரும் நிலையில், அப்பொம்மையை கொலுவில் வைக்கலாமா? சாஸ்திர நிபுணர் குமார சிவாச்சார்யாரிடம் கேட்டோம்.

- Advertisement -

“நவராத்திரிக்குக் கொலு வைப்பது என்பதெல்லாம், ஆகம விதிகளில் வராது. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த ஒன்று. பெண்களின் மகிழ்ச்சிக்காக தொடங்கப்பட்டது. பஞ்சபூதங்களில் ஒன்று நிலம். இதிலிருந்து கிடைக்கும் களிமண்ணால் தன்னை பொம்மையாகச் செய்து பூஜித்தால், அவர்களுக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று, தேவி பாகவதத்தில் அம்பிகை கூறுகிறார்.

Navaratri

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொம்மையை கொலுவில் வைக்கலாமா, கூடாதா என்பது பெரிய விஷயமில்லை. சம்பிரதாயப்படி, கொலுவின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொருவிதமான பொம்மைகளை வைப்பார்கள்.

ஆறாவது படியில் மனிதர்கள், தொழில் சார்ந்த கலைஞர்கள் பொம்மைகள் இடம் பெறும். அதில் வேண்டுமானால் ஜெயலலிதாவின் பொம்மையை வைக்கலாம். ஆனால், அதற்கு அடுத்துள்ள படிகளில் வைக்கக்கூடாது. ஏனென்றால், ஏழாவது படிகளில் சித்தர்கள், மகரிஷிகளின் பொம்மைகளைத்தான் வைக்க வேண்டும். எட்டாவது படியில் தேவர்கள், நவகிரகங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் ஆகிய பொம்மைகளையும் ஒன்பதாவது படியில் சுவாமி பொம்மைகள், பூரண கும்பம் மற்றும் லலிதா பரமேஸ்வரியின் சிலையை பிரதானமாக வைக்கவேண்டும்” என்கிறார் அவர்.

Navaratri

ஆனால், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் குருக்கள் ரவி நேர் எதிரான கருத்தை முன்வைக்கிறார். “நம் முன்னோர்கள் கொலு வைப்பதற்கு சில மரபுகளை வைத்திருக்கிறார்கள். கட்சி சார்பானவர்கள், அரசியல் தலைவர்களின் சிலைகளையெல்லாம் கொலு படிகளில் வைக்கமாட்டார்கள். படிகளுக்கு கீழே வேண்டுமானால், தங்களின் அபிமான தலைவர்களின் பொம்மைகளை வைக்கலாம். வேறெங்கும் வைக்கக்கூடாது. இது மிகப்பெரும் அவமதிப்பாக முடியும்” இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.