உங்கள் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொன்னதில் பாதி பலிக்கலையா? அதற்கு மகாபாரத கதாப்பாத்திரம் தான் காரணமாம் தெரியுமா? அது எப்படி? யார்?

- Advertisement -

எப்பொழுதும் ஜாதகம் பார்க்க செல்லும் பொழுது நல்ல நாள் பார்த்து செல்ல வேண்டும் என்று கூறப்படுவது உண்டு. அப்படி நல்ல நாள் பார்த்து ஜாதகத்தை ஜோசியரிடம் கொண்டு போய் காண்பித்தாலும் அவர் கூறும் பல விஷயங்கள் சில சமயங்களில் நடக்காமல் கூட போய் விடுவது உண்டு. எந்த ஒரு ஜோதிடரும் பொய்யை கூறுவது கிடையாது. பொய் கூறினால் அவர் ஜோதிடரே கிடையாது! அப்படியிருக்க ஜோதிடர் கூறும் சில விஷயங்கள் நமக்கு நடக்காமல் போவது ஏன்? ஜோதிடம் பலிக்காமல் போவதற்கும், மகாபாரத கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மகாபாரதத்தில் சகாதேவன் என்பவன் ஜாதக சாஸ்திரத்தை முற்றிலுமாக கற்றுணர்ந்தவன் ஆவான். மேலும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய இந்த மூன்று காலங்களையும் மிகச் சரியாக கணித்து கூறும் திறமை அவனிடம் உண்டு. மகாபாரத யுத்தத்தில், தான் வெற்றி பெற வேண்டும் என்று துரியோதனன் தேதி குறித்து தரக்கூறியது சகாதேவனிடம் தான். சகாதேவன் துரியோதனன் போரில் வெல்ல ஒரு அமாவாசை நாளை குறித்துக் கொடுக்கிறார். இந்த நாளில் போர் புரிந்தால் வெற்றி உங்களுக்கு தான் என்று கூறி அனுப்புகிறார்.

- Advertisement -

இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் மிகவும் கோபப்பட்டு, நம்மை வெல்ல நம்மிடமே வந்து தேதி குறித்து போகிறான்! நீ எப்படி எதையும் பொருட்படுத்தாமல் அவனுக்கு தேதி குறித்துக் கொடுத்தாய்? இது பொய்யான தேதி தானே? என்று கிருஷ்ணன் கேட்க அதற்கு சகாதேவன் சிரித்துவிட்டு ஜோதிட சாஸ்திரத்தை எவனொருவன் பொய்யாக கூறுகிறானோ! அவன் பாவம் செய்தவனாக கருதப்படுகிறான். அந்த பாவத்தை நான் ஒருபோதும் இழைக்க மாட்டேன் என்று கூறினார்.

உண்மையில் அமாவாசை தினத்தில் துரியோதனன் போர் புரிந்தால் நிச்சயம் நம்மை வென்று விடுவான். இருந்தாலும் என்னால் ஜோதிடத்தில் பொய் கூற இயலாது. லாப, நஷ்டங்களுக்கு உட்பட்டு தான் நான் நீதி தவறாமல் ஜோதிட சாஸ்திரத்தில் ஈடுபடுகிறேன். இதில் நடக்கப்போவது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன். பொய் கூறுவது, தகிடுதத்தம் செய்வது எல்லாம் உங்கள் வேலை, நீங்களே அதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று முகத்தில் அடித்தார் போல் கூறி விட்டு சென்றுவிட்டான் சகாதேவன்.

- Advertisement -

நடக்க இருக்கும் இந்த எதிர்காலத்தை மாற்றி அமைக்க ஸ்ரீ கிறிஷ்ணர் உண்மையில் தகிடுதத்தம் புரிந்தது தான் அவருடைய சாதுரியம். அமாவாசைக்கு முந்தைய தினம் சதுர்த்தசி அன்று கிருஷ்ணன் தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார். இதை கண்ட அத்தனை பேரும் அதிர்ந்து போய் என்ன இது நாளைக்கு தானே அமாவாசை? எதற்கு இன்று தர்ப்பணம் கொடுக்கிறீர்கள்? என்று குழம்பிப் போய் பார்த்தார்கள். இதே குழப்பம் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏற்பட்டது.

இந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள இருவரும் கிருஷ்ணனிடம் வந்து எதற்கு இப்படி செய்கிறீர்கள்? என்று கேள்வியும் கேட்டு விட்டனர். அதற்கு சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் அமாவாசை என்றால் என்ன? என்று கேட்டார். சூரியனும், சந்திரனும் சந்தித்துக் கொள்ளும் நேரமே அமாவாசை! என்றனர். மீண்டும் சிரித்துக் கொண்டே இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக தானே நிற்கிறீர்கள்? அப்போது இது அமாவாசை திதி தானே? அதனால் தான் தர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு வழி விடுங்கள் என்று கூறிவிட்டு விருவிருவென தர்ப்பணத்தை முடித்து விட்டார்.

தந்திரத்தால் பஞ்ச பாண்டவர்களை போரில் ஜெயிக்க வைத்து விட்டார். இதெல்லாம் ஒருபுறமிருக்க சகாதேவன் கிருஷ்ணர் இடம் பெற்ற வரத்தின்படி தாங்கள் ஐவரும் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் நடந்தது. ஜோதிடத்தை நன்கு அறிந்த என்னால் என்னுடைய இன்னொரு சகோதரராகிய கர்ணன் இருப்பது எப்படி மறைக்கப்பட்டது? தவறுதலாக எப்படி ஐவர் மட்டும் ஜெய்த்தால் போதும் என்று நினைத்தேன்? இதனால் தானே கர்ணனை இழந்து நிற்கிறோம்?

அப்படி என்றால் ஜாதகம், ஜோதிடம் எல்லாம் பொய்யா? என்று ஆவேசப்பட்டு ஜோதிட சாஸ்திர நூல்களை எல்லாம் எரித்து விட்டார். பலரும் தடுக்க 25% மட்டுமே மிஞ்சியது. அதை வைத்து தான் இன்றளவிலும் ஜோதிடம் கணித்து கூறப்பட்டு வருகிறது என்பது நம்பிக்கை. அப்படி இருக்கும் பொழுது ஜோதிடர்கள் கூறுவது முழுமையாக எப்போதும் நடக்காது ஆனால் அவர்கள் பொய் கூற மாட்டார்கள் என்பது மட்டும் உண்மை. இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதை ஏற்றுக் கொள்ளும் பொழுது தான் மகிழ்ச்சி நிரந்தரமாக நம்மிடம் தங்கும்.

- Advertisement -