- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாணும் பொங்கல் கொண்டாடுவது ஏன்?

காணும் பொங்கல் கொண்டாடுவது ஏன்?

- Advertisement -

தமிழர் பாரம்பரிய பண்டிகைகளில் தைத்திருநாளில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை, மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வருடம் ஒருமுறை வரக்கூடிய இந்த தைத்திருநாள் பொங்கல் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று வரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? காணும் பொங்கல் நாளில் பாரம்பரியமாக செய்யும் நடைமுறை என்ன? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த சுவாரசியமான தகவல்களை தொடர்ந்து காண்போம் வாருங்கள்.

தைப் பொங்கல் திருநாளில் சூரிய பகவான், வருண பகவான் ஆகியோருக்கு நன்றி செலுத்தி உழவர்கள் பசும்பாலில் பொங்கல் செய்து பூஜை செய்வார்கள். மறுநாள் மாட்டுப் பொங்கல் நாளில் உழவுக்கு உதவி செய்யக்கூடிய மாடுகளை கௌரவிக்கும் விதமாகவும், நன்றி செலுத்தும் விதமாகவும் கோலாகலமாக மாடுகளுக்கு அலங்காரம் செய்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் வைத்து வழிபடுவார்கள். முப்பொங்கலில் கடைசியாக இருப்பது காணும் பொங்கல்.

- Advertisement -

இந்த காணும் பொங்கல் நாள் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் எல்லோரும் வெளியில் ஊர் சுற்ற கிளம்பி விடுவோம். நமக்கு காணும் பொங்கல் என்றால் அவ்வளவுதான் தெரியும். காணும் பொங்கல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஒரு விதமான மகிழ்வுடன் கொண்டாடி வருகிறோம். உண்மையிலேயே காணும் பொங்கல் திருநாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா?

பழங்காலங்களில் தமிழர்கள் பண்பாட்டில் பெரியவர்களின் ஆசியை மிகவும் முக்கியமாக கருதினர். காணும் பொங்கலில் குலதெய்வத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். காணும் பொங்கல் நாளில் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அன்றைய நாளில் குலதெய்வத்திற்கு பொங்கல் இட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். தடைகள் இல்லாமல் வருடம் முழுவதும் செழிப்பாக இருக்க, குலதெய்வ ஆசியை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும். இளைய சமுதாயத்தினர் அன்றைய நாளில் தாத்தா, பாட்டி வீட்டிற்கு செல்வது, அவர்களிடம் பொங்கல் பற்றிய பண்பாட்டு விஷயங்களை கேட்டு அறிந்து கொள்வது போன்ற செயல்களை செய்வார்கள். பெற்றோர்களும் அவர்களை பெரியவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழர்களின் மரபுகளை கற்றுத் தருவார்கள்.

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் கூறுவார்கள். கன்னிப் பெண்கள் அந்த நாளில் நல்லபடியாக திருமணம் நடைபெற, நல்லவரன் அமைய குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட்டால் கன்னி பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் என்பது நம்பிக்கை. பெண்கள், உறவினர் பெண்கள் மற்றும் சகோதரிகள் மற்றும் தோழிகளுடன் வெளியில் ஒரு இடத்தில் சந்தித்து பொங்கல் வைத்து ஆடிப்பாடி மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி செலுத்தும் நாளாக இந்நாள் அவர்களுக்கு அமையும்.

இதையும் படிக்கலாமே:
அனுமனுக்கு பிடித்த 3 ராசிகள்

மேலும் குலதெய்வ ஆசீர்வாதமும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பெறக்கூடிய இந்த நாளை தான் காணும் பொங்கல் என்று சொல்லுவார்கள். காணும் பொங்கலில் மனதில் இருக்கும் சுமைகள் இறங்கி, நமக்கானவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் ஆசிர்வாதத்தையும், பரிசுகளையும் பெற்று ஆடிப்பாடி கண்டு மகிழ்வதையே “காணும் பொங்கல்” என்கிறோம். இந்த காணும் பொங்கல் நாளில் நாமும் நன்றி மறவாமல் குலதெய்வத்திற்கும், பெரியவர்களுக்கும் நன்றி செலுத்தி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். நமக்கு பிடித்ததை உற்றார், உறவினர்களுடன், நண்பர்களுடன் பரிசுகளாக கொடுத்து அவர்களுடைய மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுப்போம்.

சற்று முன்