தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள் | Theethum nandrum pirar thara vaara meaning in Tamil

Theethum nandrum pirar thara vaara meaning in Tamil
- Advertisement -

தீதும் நன்றும் பிறர் தர வாரா | Theethum nandrum pirar thara vaara porul

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

தமிழின் சங்க கால இலக்கிய நூல்களுள் ஒன்றான “புறநானூறு” என்கிற தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த நூலில் இந்த வரி இடம்பெற்றிருக்கின்ற முழுமையான பாடல் உள்ளது. இந்த பாடலை இயற்றியவர் சங்க கால புலவர்களில் ஒருவரான “கணியன் பூங்குன்றனார்” என்பவராவார். இந்த “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்கிற அற்புதமான வாக்கியத்திற்குரிய விளக்கத்தை இப்போது நாம் பார்க்கலாம்.

- Advertisement -

Theethum nandrum pirar thara vaara meaning in Tamil:
இந்த உலகத்தில் “நன்மை” என்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்பதமான “தீமை” என்று ஒன்று இருப்பது நிச்சயம். இவை இரண்டும் ஒன்றை, ஒன்று நிறைவு செய்கின்றன. நன்மை – தீமை என இரண்டும் கலந்தது தான் மனித வாழ்க்கை. ஆனால் ஒரு சில மனிதர்கள் தமக்கு நன்மை உண்டாகும் பொழுது அது தன்னால் தான் ஏற்பட்டது என பெருமையும், கர்வமும் கொள்கின்றனர். அதே நேரத்தில் அவர்களுக்கு தீமையான விடயங்கள் நடைபெறும் போது அது பிறரால் தான் ஏற்பட்டது என கோபமும், வருத்தமும் கொள்கின்றனர். இப்படியான நிலையற்ற மனித மனம் குறித்து நன்கு அறிந்த சங்ககால புலவரான கணியன் பூங்குன்றனார், எந்த ஒரு தனி மனிதனுக்கும் ஏற்படுகின்ற நன்மை – தீமைகளுக்கும், அந்தந்த தனி மனிதனின் குணம், எண்ணம், செயல்பாடு தான் காரணம் என்றும், மற்ற நபர்களால் நமக்கு நன்மையோ அல்லது தீமையோ ஏற்படுவதில்லை என தெளிவுபட உரைத்துள்ளார்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள் – எடுத்துக்காட்டு கதை:

ஒரு கிராமத்தில் மிகுந்த பஞ்சத்தின் காரணமாக அங்கிருந்தவர்கள் பலரும் நகரங்களில் வேலை செய்து பிழைக்க சென்றுவிட்டனர். எனினும் ஒரு சிலர் தங்கள் கிராமத்தை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் முனுசாமி. முனுசாமிக்கு சொந்தமாக சில ஆடுகளும், ஆட்டுக்குட்டிகளும், ஒரு சில முருங்கை மரங்களும் இருந்தன. வருட செலவிற்கு ஆடுகளை விற்றும், வாராந்திர செலவுகளுக்கு முருங்கைக்காய்களை அருகில் இருக்கும் ஊரில் விற்றும் முனுசாமி பிழைத்து வந்தார்.

- Advertisement -

தான் வளர்க்கின்ற முருங்கை மரங்களில் உள்ள முருங்கை காய்களை 10 கிலோ எடை அளவிற்கு சேர்த்து, தன் கிராமத்திற்கு எட்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கின்ற ஒரு ஊரில் இருக்கும் மளிகைக் கடைக்காரரிடம் விற்று, அதற்கு பதிலாக தன் வீட்டிற்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை பண்டமாற்று முறையில் பெற்றுக்கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

முனுசாமி கொண்டு வருகின்ற முருங்கை காய்கள் சிறந்த ருசியாக இருப்பதால் அதை அப்பகுதிகள் மக்கள் வாங்க ஆர்வம் கொண்டிருந்தனர். இதை நன்கறிந்த அந்த மளிகை கடைக்காரர் முனுசாமி கொண்டு வருகின்ற முருங்கைக் காய்களை, தன் கடையில் இருக்கும் முருங்கைகாய்களுடன் சேர்த்து மக்களுக்கு விற்று நல்ல லாபம் சம்பாதித்தார். அதேநேரம் அந்த மளிகைக் கடைக்காரர் முனுசாமிக்கு நீண்டகாலமாக 10 கிலோ முருங்கை காய்களுக்கு 1 கிலோ அளவிலான அரிசி, பருப்பு, சர்க்கரையை மட்டுமே பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தார்.

- Advertisement -

பல காலமாக முனுசாமி மளிகை கடை காரருக்கு முருங்கைக்காய்களை கொண்டு வந்து விற்பதால் அந்த மளிகைக் கடைக்காரர் முனுசாமி கொண்டு வரும் அந்த முருங்கை காய்களை எடை போட்டு பார்க்காமலே, அவர் என்ன எடை என கூறுகிறாரோ அதையே நம்பி அந்த முருங்கைக் காய்களை வாங்கி, அதற்கு பதிலான மளிகை பொருட்களை முனுசாமிக்கு கொடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதற்கு காரணம் முனுசாமி நேர்மையானவர், தன்னை ஏமாற்ற மாட்டார் என மளிகை கடைக்காரர் நினைத்தார்.

வழக்கம்போல் முனுசாமி 10 கிலோ அளவிலான முருங்கைக் காய்களை மளிகைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய மளிகை பொருட்களை பெற்று சென்றார். சிறிது நேரத்தில் மளிகை கடை காரரிடம் வந்த ஒரு சமையல்காரர், தனக்கு பத்து கிலோ அளவிற்கு முருங்கை காய்கள் வேண்டும் என கேட்டார். அப்போது முனுசாமி கொண்டு வந்த 10 கிலோ முருங்கைக்காய்களை கடை எடை எந்திரத்தில் எடை போட்ட அந்த மளிகை கடைக்காரர், முனுசாமியிடம் வாங்கிய முருங்கை காய்கள் 9 கிலோ எடை தான் என எடை எந்திரம் காட்டியது. இதைக் கண்டதும் அந்த மளிகை கடைக்காரர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்.

அந்த நாள் முழுவதும் மளிகை கடைக்காரர் மனதில் உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. முனுசாமியை தாம் எவ்வளவு நம்பினோம் எனவும், தனக்கு ஏன் இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை முனுசாமி செய்தார் என எண்ணி மிகவும் வருந்தினார். அதே நேரம் அடுத்தமுறை முனுசாமி முருங்கைக் காய்களை கொண்டு வரும் பொழுது அவரை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என முடிவு செய்தார்.

வழக்கம்போல் வார இறுதியில் தனது தோட்டத்தில் விளைந்த முருங்கைக் காய்களை சேகரித்து கொண்டு மளிகைக் கடைக்காரரிடம் வந்தார் முனுசாமி. அப்போது மளிகைக் கடைக்காரர் முனுசாமியிடம் முருங்கை காய்கள் எத்தனை கிலோ எடை உள்ளது? எனக் கேட்டார். அதற்கு முனுசாமி வழக்கம் போல 10 கிலோ எடை உள்ளது என கூறினார். அப்போது எடை எந்திரத்தில் முனுசாமி கொண்டு வந்த முருங்கைக்காய்களை எடை போட்டுப் பார்த்தார் மளிகை கடைக்காரர். அப்போது அந்த மொத்த முருங்கைக்காய்களும் 9 கிலோ தான் என காட்டியது.

இதைக்கண்ட மளிகைக்கடைக்காரர் ஆத்திரத்தில் முனுசாமியை அடித்துவிட்டார். மேலும் தாம் முனுசாமியை எவ்வளவு நம்பிய தாகவும், கிராமத்துக்காரர், தம்மை ஏமாற்ற மாட்டார் என நினைத்து முருங்கைக்காய்களை நம்பிக்கையுடன் அதன் எடையை ஆராயாமல் வாங்கினேன் எனவும், தன்னுடைய நம்பிக்கையை முனுசாமி தவிடுபொடியாக்கி விட்டதாகவும் எண்ணி வருந்தினார்.

அப்பொழுது அங்கு நிலைகுலைந்து நின்ற முனுசாமி மளிகைக் கடைக்காரரிடம் தன்னை மன்னிக்குமாறு கூறினார். மேலும் தாம் எடைக்கற்கள் வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருந்ததாகவும். எனவே ஒவ்வொரு முறையும் மளிகை கடைக்காரர் கொடுத்தனுப்பும் 1 கிலோ பருப்பு பையை தராசின் ஒரு தட்டில் வைத்தும், தான் சேகரித்த முருங்கை காய்கள் அனைத்தையும் மற்றொரு தட்டில் வைத்தும் எடை போட்டு தான் கொண்டு வருவதாக கூறினார்.

இதைக் கேட்ட மளிகை கடைக்காரர் பேயறைந்தது போல நின்றார். தான் கிராமத்து வாசியான முனுசாமியை ஏமாற்ற நினைத்து செய்த நம்பிக்கை துரோகம், தனக்கே வேறு ரூபத்தில் திரும்ப வந்ததை எண்ணி மிகவும் வருந்தினார். அதாவது இத்தனை காலம் முனுசாமியை ஏமாற்ற நினைத்த, மளிகை கடைக்காரர் தானம் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: 1330 திருக்குறள் பொருளுடன்

இந்தக் கதையிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள முடிகின்றது என்றால் “தீதும், நன்றும் பிறர் தர வாரா” என்பது தான்

- Advertisement -