வளர்பிறை அஷ்டமி திதி, தேய்பிறை அஷ்டமி திதியில் தான் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். வாரத்தில் வரக்கூடிய ஏழு நாட்கள் இருக்கிறது அல்லவா. ஞாயிறு தொடங்கி வாரத்தில் வரும் அந்த ஏழு நாட்களில், உங்கள் ராசி படி நீங்கள் எந்தக் கிழமையில் பைரவரை வழிபாடு செய்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய பண பிரச்சனைகள் தீரும், கடன் சுமை குறையும் என்பதை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ராசிப்படி பைரவர் வழிபாடு
சிம்மக்ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பைரவருக்கு வடைமாலை சாத்தி இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு மனம் உருகி வழிபாடு செய்தால், கடன் பிரச்சனைகள் எல்லாம் கூடிய சீக்கிரத்தில் தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு மட்டுமல்லாமல் உங்கள் திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கும் சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.
திங்கட்கிழமை அன்று கடக ராசிக்காரர்கள், பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பைரவருக்கு அபிஷேகம் செய்ய பன்னீர் வாங்கி கொடுக்கலாம். அலங்காரம் செய்ய சந்தனம் வாங்கி கொடுக்கலாம். கூடவே உங்கள் கையால் வில்வம் வாங்கி கொடுத்து பைரவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பைரவர் அஷ்டகத்தை படிக்க வேண்டும், அல்லது பைரவருக்கு 108 போற்றிகள் இருக்கும் அதையும் படிக்கலாம். இப்படி செய்து வர உங்களுடைய கடன் சுமை குறையும்.
செவ்வாய்க்கிழமை மேஷ ராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள் பைரவர் சன்னிதானத்திற்கு சென்று மிளகு விளக்கு ஏற்ற வேண்டும். சிவப்பு துணியில் 27 மிளகுகளை வைத்து முடிந்து மண் அகல் விளக்கில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் உங்கள் கடன் பிரச்சனை தீரும். நீங்கள் இழந்த சொத்து பணம் இப்படிப்பட்ட விஷயங்களை கூட திரும்பவும் மீட்டு எடுக்கலாம்.
புதன்கிழமை மிதுன ராசிக்காரர்கள், கன்னி ராசிக்காரர்கள் பைரவர் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய வேண்டும். முந்திரி பருப்பை பைரவருக்கு பிரசாதமாக வைத்து வேண்டிக் கொண்டால் உங்கள் கடன் பிரச்சனை தீரும்.
வியாழக்கிழமை தனுசு ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்கள் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளில் இலுப்பெண்ணை ஊற்றி, பைரவருக்கு நெய் சாதம் செய்து கொடுத்து, முல்லைப்பூ வாங்கி கொடுத்து வழிபாடு செய்தால் உங்கள் கடன் பிரச்சினை தீரும். இதோடு சேர்த்து திருமணம் ஆகாதவர்களுக்கும் சீக்கிரம் திருமணம் நிச்சயிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை ரிஷப ராசிக்காரர்களும் துலாம் ராசிக்காரர்களும் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, பைரவருக்கு புனுகு வாங்கி கொடுத்து, 2 செவ்வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து உங்கள் வேண்டுதலை வைத்தால் நிச்சயம் உங்களுடைய கடன் சுமை குறையும். செல்வ வளம் உயரும்.
சனிக்கிழமை பைரவர் வழிபாடு யாரெல்லாம் செய்வது. சனிபகவானால் யாருக்கெல்லாம் பாதிப்பு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் சனிக்கிழமை போய் பைரவரை வழிபாடு செய்யலாம். ஏழரை சனி, பாத சனி, கண்டக சனி, ஜென்ம சனி, சனி திசை நடப்பவர்கள், சனிக்கிழமை நீங்கள் தவறாமல் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.
குறிப்பாக மகரம் கும்பம் இரண்டு ராசியை கொண்டவர்கள், சனிக்கிழமை பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். 2 மண் அகல் விளக்குகளின் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பைரவருக்கு வேண்டுதல் வைக்க உங்கள் கடன் பிரச்சனை தீரும். உங்கள் கையால் செவ்வரளி பூக்களை பைரவருக்கு வாங்கித் தாங்க.
இதையும் படிக்கலாமே: சொந்த வீடு கட்ட பிரியாணி இலை பரிகாரம்
மேல் சொன்ன விஷயங்கள் எல்லாம் பொதுப்படையாக ஜோதிடத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய விஷயங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் ஜோதிடம் சார்ந்த இந்த விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம்.