கடன் இல்லாத வாழ்க்கை என்பது மிகப்பெரிய விஷயமாக இன்றைய காலகட்டத்தில் அமைந்துவிட்டது. கடன் வாங்க கூடாது என்று நினைத்தாலும் பிறரின் தூண்டுதலாலும் வற்புறுத்தலாலும் அதே சமயம் தேவைகளாலும் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகி விடுகிறது. கடன் வாங்கும் பொழுது எந்த அளவிற்கு சுலபமாக இருக்கிறதோ அதைவிட பல மடங்கு கடினமாக கடனை திருப்பி செலுத்தும் பொழுது நாம் கஷ்டப்படுகிறோம். அப்பொழுதுதான் நாம் ஏன் கடனை வாங்கினோம் கடனை வாங்காமலேயே சமாளித்திருக்கலாமே என்ற எண்ணம் எல்லாம் தோன்றும்.
கடனை வாங்குவதற்கு முன்பே ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அந்த கடன் நமக்கு தேவைதானா என்பதை உணர்ந்த பிறகு வாங்க வேண்டும். அப்படி வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு அயராது பாடுபட்டு உழைக்க வேண்டும். என்னதான் கஷ்டப்பட்ட உழைத்தாலும் கடனாக வாங்கிய அசல் தொகையில் வட்டியை மட்டும் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம் என்பவர்களும் வட்டி கட்டுவதற்கு கூட வருமானம் இல்லை அதற்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பவர்களும் தங்களுடைய முயற்சிகளை கைவிடாமல் செய்வதோடு தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட வேண்டும்.
கடன் பிரச்சினை தீருவதற்கு பல பரிகாரங்களும் வழிபாடுகளும் இருக்கின்றன. பலரும் கடனை தீர்ப்பதற்காக செய்யக்கூடிய பரிகாரங்களை கடன் வாங்கியே செய்வார்கள். அது முற்றிலும் தவறு. கடன் வாங்காமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் செய்யக்கூடிய பல வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் ஒரு வரி மந்திரம்
இதை மந்திரம் என்று கூறுவதை விட அம்மனின் நாமம் என்று தான் கூற வேண்டும். லலிதா சகஸ்ரநாமம் என்று லலிதாம்பிகையை போற்றும் வகையில் ஆயிரம் நாமங்கள் அதில் இருக்கும். ஒவ்வொரு நாமத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் என்பது இருக்கும். அந்த லலிதா சகஸ்ரநாமத்தில் திருமணம் நடைபெறுவதற்கு, குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு, குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு, நல்ல வருமானம் ஏற்பட, விரும்பிய வேலை கிடைக்க, சொந்தமாக வீடு கட்ட என்று நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
அந்த ஆயிரம் நாமங்களில் ஒவ்வொரு நாமத்திற்கும் இருக்கக்கூடிய பலனை உணர்ந்து நாம் கூறினோம் என்றால் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் நம்முடைய கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த லலிதா சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய ஒரே ஒரு நாமத்தை மட்டும் தினமும் இடைவிடாது கூறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் முறையாவது கூற வேண்டும். நம்முடைய இஷ்ட தெய்வத்தின் பெயரை கூறுவோம் அல்லவா? அதற்கு பதிலாக இந்த நாமத்தை நாம் கூறினோம் என்றால் எவ்வளவு பெரிய கடன் பிரச்சினையாக இருந்தாலும் அது தீரும் என்று கூறப்படுகிறது.
இந்த நாமத்தை நாம் மந்திரமாக உச்சரிப்பதற்கு முன்பாக குருவிடம் இருந்து மந்திரத்தை வாங்குவது போல் வாங்கி உச்சரிக்க வேண்டும். அப்பொழுதுதான் இதற்குரிய முழுமையான பலனையும் நம்மால் பெற முடியும். “ஓம் அபர்ணாய நமஹ“. இந்த நாமத்தை ஒரு வெள்ளை நிற பேப்பரில் சிவப்பு நிற மையால் எழுதி நாளைய தினம் வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமை அதோடு பிரதோஷமும் சேர்ந்து வருகிறது என்பதால் சிவபெருமானை குருவாக நினைத்துக் கொண்டு இந்த சீட்டை சிவபெருமானின் முன்பாக வைக்க வேண்டும்.
பிறகு குருதட்சணையாக 11 ரூபாயும் வெற்றிலை பாக்கையும் சிவபெருமானுக்கு முன்பாக வைத்துக்கொள்ளுங்கள். சிவபெருமானை மனதார நினைத்து “உங்களுடைய அறிவுரையின்படி இந்த நாமத்தை நான் உச்சரிக்க போகிறேன்” என்று கூறிவிட்டு அந்த பேப்பரை எடுத்து நீங்கள் படிக்க வேண்டும். தூங்கி எழுவது முதற்கொண்டு மறுபடியும் படுத்து உறங்கும் வரை இந்த நாமத்தை நாம் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
அம்பிகை சிவபெருமானை அடைவதற்காக ஊசி முனையில் விரதம் இருந்தார்கள் அல்லவா? அந்த சொரூபத்திற்கு தான் அபர்ணா என்று பெயராம். அதனால் நாம் சிவபெருமானிடம் இருந்து இந்த நாமத்தை மந்திரமாக உபதேசம் பெற்று கூறும் பொழுது சிவபெருமான் மற்றும் அம்பிகையின் அருளால் விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.
இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம்
மிகவும் எளிமையான ஒரு ரூபாய் கூட செலவு இல்லாத இந்த ஒரு வரி மந்திரத்தை எவ்வளவு முறை கூற முடியுமோ அவ்வளவு முறை தினமும் கூறி வர விரைவிலேயே நம்முடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.