வைகாசி விசாகமும், பௌர்ணமி திதி இந்த இரண்டும் சேர்ந்ததுதான் வரும். ஆனால் இந்த 2025 ஆம் ஆண்டு 9-6-2025 திங்கட்கிழமை வைகாசி விசாகம். அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை பௌர்ணமி திதியும் பிரிந்து தனித்தனியாக வந்திருக்கிறது. இந்த இரண்டு நாளிலுமே முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம். மிகவும் நல்ல பலனை நமக்கு கொடுக்கும். நாளைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி திதியில் முருகர் வழிபாடு செய்வதும் நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
இரண்டு நாள் தொடர்ந்து முருக பெருமானை வழிபாடு செய்ய ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பை யாரும் தவறவிடாதீர்கள். உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும். சொந்த வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் விசாகம் அன்று செய்ய வேண்டிய தானம் என்ன என்பதை பற்றிய தகவலைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இந்த தானத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை விசாக நட்சத்திரத்தன்று செய்யலாம். நாளைய தினம் பௌர்ணமி திதி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை இருக்கிறது. நாளைய தினமும் முருகனை வேண்டி இந்த தானத்தை செய்தாலும் சிறப்பு. உங்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த தானத்தை செய்து விடுங்கள்.
எவ்வளவு பெரிய கடனிலிருந்தும் சுலபமாக வெளிவரும் வாய்ப்பை முருகப்பெருமான் நிச்சயம் உங்களுக்கு கொடுப்பான். அது மட்டும் அல்லாமல் எட்டு திக்கில் இருந்து முருகப்பெருமான் உங்களை காக்க நீங்கள் தினம் தினம் வீட்டில் இருந்து கிளம்பும்போது, சொல்ல வேண்டிய ஒரு 8 வரி மந்திரத்தையும் இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றேன்.
வைகாசி விசாகம் தானம்
வைசாசி விசாகத் அன்று துவரம் பருப்பு கல் உப்பு இந்த 2 பொருட்களை வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். முருகன் கோவில் அர்ச்சகரியிடம் ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ கல்லுப்பு வாங்கி ஒரு தாம்பூல தட்டில் வைத்து வெற்றிலை பாக்கு பழத்தோடு மரியாதையோடு இந்த தானத்தை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். உங்களால் முடியும் என்றால் 2 ஏழைகளுக்கு துவரம் பருப்பு கல் உப்பு தானம் செய்யலாம்.
பெரிய அளவில் இருக்கும் பண பிரச்சனைகளை சரி செய்ய இந்த எளிமையான தானம் உதவியாக இருக்கும். இதோடு சேர்த்து இன்று மதியம் அல்லது நாளை மதியம் பசியோடு இருக்கும் இரண்டு பேருக்கு தயிர் சாதம், எலுமிச்சை பழ சாதம் இது போன்ற உணவை வாங்கி தானம் கொடுங்கள். கட்டாயம் இதோடு ஊறுகாய் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆமாங்க தானம் கொடுக்கும் போது ஊறுகாய் வைத்து தானம் கொடுத்தால் நமக்கு கோடி பலன் தேடி வரும் என்பது நம்பிக்கை.
வைகாசி விசாகத்தன்று கந்தகுரு கவசம் படிப்பது ரொம்பவும் நல்லது. முடியவில்லை என்றால் கந்த குரு கவசத்தை ஒலிக்க விட்டு கேளுங்கள். குறிப்பாக கந்த குரு கவசத்தில் இருக்கும் இந்த எட்டு வரிகளை தினமும் காலையில் வெளியில் கிளம்புவதற்கு முன்பு படித்துவிட்டு கிளம்புங்கள். எட்டு திக்கில் இருந்தும் முருகப்பெருமான் உங்களை காத்து விடுவார்.
கந்த குரு கவசம் பாடல் வரிகள்
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
இதையும் படிக்கலாமே: விதியை மாற்றும் வைகாசி விசாக தீபம்
இவ்வளவுதாங்க. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும். முருகன் அனைவரையும் காப்பாற்ற கலியுக கடவுளாக நிச்சயம் இந்த பூமியில் தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வீரவேல் முருகனுக்கு அரோகரா. பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு அரோகரா. அரோகரா அரோகரா அரோகரா.