பிரணவ மந்திரத்தின் சொரூபமாக விளங்கக் கூடிய எம்பெருமான் முருகனிடம் வேண்டியவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இவரின் நாமத்தை உச்சரித்தாலே நம்மை நாம் மெய் மறந்து விடுகிறோம். தீர்க்க முடியாத கடன் பிரச்சனைகளை விரைவில் தீர்க்கக் கூடிய முருகப்பெருமானுக்கு என்ன விளக்கு ஏற்ற வேண்டும்? எப்படி ஏற்ற வேண்டும்? என்னும் தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கடன் பிரச்சனை மட்டுமல்லாமல், உங்களுக்கு தீர்க்க முடியாத எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அறுபடை வீடுகளையும் ஒரு முறை தரிசித்து வாருங்கள். முடிந்தால் கடலுக்கு அருகே இருக்கும் படை வீட்டிற்கு சென்றாவது இறைவனை தரிசித்து விடுங்கள், நினைத்தது நடக்கும். முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தான் உகந்த கிழமை. இந்தக் கிழமையில் தீபம் ஏற்றுபவர்களுக்கு முருகப்பெருமான் விரைவிலேயே வேண்டுதல்களை ஏற்று விடுகிறார்.
ஆறு வாரம் தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு செவ்வாய் ஹோரையில் 11 ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு சிகப்பு துணியில் போட்டு நன்கு முடிந்து கொள்ளுங்கள். சந்தன குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.
இதை முருகன் படத்திற்கு முன்பு வைத்து சுத்தமான அகல்விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அகல் விளக்கிற்கு சந்தனம் மஞ்சள் தடவி, குங்குமப் பொட்டிட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் புங்க எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் ஊற்றியதும் தாமரை தண்டு திரியை திரித்து போடுங்கள். முருகனுக்கு உகந்த திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், முருகன் மந்திரங்கள் எது உங்களுக்கு தெரியுமோ அதை உச்சரித்து தீபம் ஏற்றுங்கள்.
ஏற்றிய தீபச்சுடர் கிழக்கு நோக்கி பிரகாசமாக எரிய வேண்டும். பானகம் நைவேத்தியம் படைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு வேளையாவது உபவாசம் இருந்து முருகனை நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றிவிட்டு, அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு யாருக்கு கடன் பிரச்சனைகள் இருக்கிறதோ, அவருடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வாருங்கள்.
இதையும் படிக்கலாமே:
பற்றி எரியும் கடன் பிரச்சனையை தீர்க்க பெருமாள் வழிபாடு
ஆறு வாரம் தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி அர்ச்சனை செய்து முருகனை வழிபட்டு விட்டு ஏழாவது வாரம் நீங்கள் முருகனை தரிசிக்கும் பொழுது அந்த 11 ரூபாயை உண்டியலில் அப்படியே போடுங்கள். அதற்குள் கடன் அத்தனையும் தீர்ந்து விட்டிருக்கும். கடன் பிரச்சனை தீர்வதற்குரிய அறிகுறிகள் ஆவது உங்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த புங்க எண்ணெய் தீப பரிகாரம் செய்வதற்கு தடைகள் எவ்வளவு வந்தாலும், இடையூறுகளை தகர்த்து தொடர்ந்து பிரார்த்தனை செய்து வாருங்கள். கட்டுக்கடங்காத கடன் பிரச்சனைகளும், கழுத்தை நெரிக்கும் வண்ணம் இருக்கும் சகல பிரச்சனைகளும் நம்பிக்கையுடன் இப்பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் தீரும்.