கல்யாணத்தில் கொடுக்கும் ரவை கேசரி போலவே கொஞ்சம் கூட கெட்டியாக இல்லாமல் சாஃப்ட்டான முறையில் எப்படி வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது? இந்த ரகசியம் உங்களுக்கு தெரிஞ்சா இனி ரவா கேசரி செய்வதில் நீங்கள் தான் கில்லாடி!

rava-kesari-recipe
- Advertisement -

ரவா கேசரி என்றால் எல்லோருக்கும் விருப்பமான ஒரு எளிமையான ஸ்வீட் வகையாக இந்தியர்களுக்கு உண்டு. இந்த ரவா கேசரி பார்ப்பதற்கே நல்ல நிறமாகவும், சுவையாகவும் இருக்கிறது. இதை கல்யாண வீடுகளில் கொடுக்கும் பொழுது கொஞ்சம் கூட கட்டிகள் இல்லாமல் சாஃப்ட்டாக இருக்கும். அப்படியே கைகளில் எடுத்தால் நெய் கைகளில் ஒட்டும். அந்த அளவிற்கு சாஃப்ட்டான கன்சிஸ்டெண்சியில் வீட்டிலேயே எப்படி கல்யாண ரவா கேசரி சுவையான முறையில் எளிதாக தயாரிப்பது? என்பதை இனி பார்ப்போம்.

ரவை கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
நெய் – 100 கிராம், சமையல் எண்ணெய் – 50 கிராம், முந்திரிப் பருப்பு – 25, உலர் திராட்சை – 20, ரவை – 250 கிராம், தண்ணீர் – 3 1/2 கப், உப்பு – ஒரு சிட்டிகை, கேசரி பவுடர் – கால் ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன். பச்சைக் கற்பூரம் – ஒரு மிளகு அளவு.

- Advertisement -

ரவை கேசரி செய்முறை விளக்கம்:
ரவை கேசரி செய்வதற்கு முதலில் ஒரு ஆழாக்கு ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆழாக்கு 250 கிராம் அளவு உள்ளதாக இருக்க வேண்டும். அதே அளவுகளில் மற்ற பொருட்களையும் அளந்து எடுக்க வேண்டும். தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் 100 கிராம் நெய் மற்றும் 50 கிராம் சமையல் எண்ணெய் சேர்த்து காய விடவும். நெய் உருகி காய்ந்ததும், அதில் ஒரு கைப்பிடி அளவிற்கு முந்திரி மற்றும் தேவையான அளவிற்கு உலர் திராட்சைகள் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். வறுத்து எடுத்தவற்றை தனியாக எண்ணெய் இல்லாமல் நன்கு வடிகட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

சட்டியில் இருக்கும் நெய்யிலேயே நீங்கள் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விடுங்கள். நெய் எல்லாம் உறிந்து ரவை உப்பி வர பிரட்டிவிட வேண்டும். அதன் பிறகு ஒரு ஆழாக்கு ரவைக்கு அதே ஆழாக்கில் 31/2 ஆழாக்கு அளவிற்கு தண்ணீர் எடுத்து ஊற்ற வேண்டும். தண்ணீரை ஒரு முறை நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஊற்றுங்கள் சரியாக வேகும்.

- Advertisement -

ரவை முழுவதும் தண்ணீர் உறிந்து கொதித்து வரும் பொழுது ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு மற்றும் தேவையான அளவுக்கு கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். ஒரு நிமிடம் நன்கு கலந்து விட்டதும் மூடி போட்டு மூடி வைத்து வேக விடுங்கள். இரண்டு நிமிடத்தில் எல்லா தண்ணீரையும் ரவை உறிந்து நன்கு கெட்டியாக திரண்டு வரும். அதன் பிறகு மூடியை திறந்து பாருங்கள். எண்ணெய் பிரிந்து மேலே கெட்டியான ரவை கேசரி தயாராகி இருக்கும். இதனுடன் இப்போது அதே ஆழாக்கில் ஒன்றரை ஆழாக்கு அளவிற்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்து கேசரி இன்னும் இளக ஆரம்பிக்கும். நன்கு இளகியதும் குறைந்த தீயில் வைத்து மீண்டும் ரெண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இப்படி ஒரு குருமாவை இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. 10 நிமிடத்தில் பாசிப்பருப்பு குருமா ரெசிபி உங்களுக்காக.

அவ்வளவுதான், இப்போது ஏலக்காய் தூள் நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விட வேண்டும். கடைசியாக ஒரு சிறு மிளகு அளவிற்கு பச்சை கற்பூரம் சேர்த்து பாருங்கள், கோவிலில் கொடுக்கும் கேசரி போல சூப்பராக இருக்கும். நெய், எண்ணெய் எல்லாம் நன்கு திரண்டு கேசரி சூப்பரான கலரில் கொஞ்சம் கூட கரண்டியில் ஒட்டாமல் அல்வா போல வந்திருக்கும். இதை எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும், அது அதனுடைய தன்மையிலிருந்து கெட்டி படாது, ரொம்பவும் சாஃப்ட்டாகவே இருக்கும். நீங்களும் இதே மெத்தட்டில் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

- Advertisement -